'மது' கூட்டாளிகள்... தினகரன் அறிக்கையின் ஆணிவேர் என்ன? | ttv dinakaran statement background

வெளியிடப்பட்ட நேரம்: 16:11 (14/12/2018)

கடைசி தொடர்பு:16:11 (14/12/2018)

'மது' கூட்டாளிகள்... தினகரன் அறிக்கையின் ஆணிவேர் என்ன?

செந்தில் பாலாஜி, தி.மு.க-வில் சேரப்போவது உறுதியான நிலையில், நேற்று டி.டி.வி. தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 'முலாம் பூசப்பட்ட போலிகள்  போனால் போகட்டும்' என அவர் வெளியிட்ட அறிக்கையில், 'மதுபானக் கூடம் வைத்திருந்தவர்' என அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கிறார். 

செந்தில் பாலாஜி தினகரன் ஆதரவாளர்

'அரவக்குறிச்சியில் அ.தி.மு.க (அம்மா) என்ற பெயரில் நாம் இயங்கியபோது அறிவிக்கப்பட்டிருந்த ஒரு ஒன்றியக் கழகச் செயலாளர், நேற்று கட்சியை விட்டு சென்றுவிட்டாராம். மறைமுகமாக மதுபானக் கூடம் நடத்திக்கொண்டிருந்த அந்த நபர், ஏற்கெனவே இதே செயலைச் செய்திருந்தபோது, அந்த மாவட்டத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்த நமது கட்சியின் பொறுப்பாளர், அவரை மீண்டும் அழைத்துக்கொண்டு வந்து, அந்த நபரை மன்னித்து வாய்ப்பளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவ்வாறு நடந்துகொண்ட அந்தப் பொறுப்பாளர், தனது பொறுப்பை மறந்து தற்போது, தூக்க நிலைக்குச் சென்றாரா அல்லது தூக்கப்பட்ட நிலைக்குச் சென்றாரா என்பது தெரியவில்லை'  - இதுதான் தினகரன் அறிக்கையில் இடம்பெற்ற முக்கியமான வாசகம்.

மதுபானக் கூடம் நடத்தியவருக்கு  செந்தில் பாலாஜி சிபாரிசு செய்தார் என்பதுதான் இந்த வாக்கியத்தின் சாராம்சம். செந்தில் பாலாஜியின் பெயரைக் குறிப்பிடாமல் இப்படி மறைமுகமாகக் குற்றம் சாட்டியிருந்தார் தினகரன். இந்த விஷயத்தை  அறிக்கையில் சுட்டிக் காட்ட காரணம் என்ன?  2008-ம் ஆண்டு, கரூரில் நடந்த சம்பவம்தான் இதற்குப் பின்னணி என்கிறார்கள் கரூர் அ.தி.மு.க-வினர்.

தினகரன்

2008-ம் ஆண்டு, தி.மு.க ஆட்சியின்போது கரூர் அ.தி.மு.க-வை சேர்ந்த 7 பேர் போலி மது விற்பனை செய்ததற்காகக்  கைது செய்யப்பட்டனர். இவர்கள், செந்தில் பாலாஜியோடு தொடர்பில் இருந்தார்கள்.  கரூர் மாவட்ட அ.தி.மு.க மாணவர் அணி செயலாளர் கணேஷ் என்கிற முத்துகுமார், கரூர் நகர மாணவர் அணி செயலாளர் ராஜா, தாந்தோணி நகர அ.தி.மு.க செயலாளர் ரவி உள்ளிட்டோர், 2008 ஏப்ரல் மாதம் கைதுசெய்யப்பட்டனர். கரூரில் போலி மது விற்பனை கொடிகட்டிப் பறப்பதைப் பலரும் அப்போது சுட்டிக் காட்டினார்கள். இப்போது மத்திய அமைச்சராக இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணனே ‘‘போலி மது கும்பலுக்கும் செந்தில் பாலாஜிக்கும் தொடர்பு உண்டு’’ எனப் பேட்டி கொடுத்தார்.  

இந்த விஷயங்களைப் பின்னணியாக வைத்துத்தான், தினகரன் தனது அறிக்கையில் சீறியிருந்தார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க