‘ரூ.2 கோடி கொடு... மரத்திலிருந்து இறங்குறேன்!’ - போலீஸை திணறடித்த 50 வயது மனநோயாளி | 'Give me Rs. 2 crores' - mentally disabled threatens Police

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (14/12/2018)

கடைசி தொடர்பு:17:20 (14/12/2018)

‘ரூ.2 கோடி கொடு... மரத்திலிருந்து இறங்குறேன்!’ - போலீஸை திணறடித்த 50 வயது மனநோயாளி

வேலூர் நீதிமன்றம் அருகே மரத்தில் ஏறிய மனநோயாளி, ‘ரூ.2 கோடி கொடு... அப்பத்தான் கீழே இறங்குவேன்’ என்று கூறி போலீஸை நீண்ட நேரம் திணறடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மரத்தில் ஏறிய மிதியவர்

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் பின்புறம் இருக்கும் பெரிய மரத்தில் இன்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஏறினார். மரக்கிளையின் உச்சிக்குச் சென்ற அவர், அருகே செல்லும் மின் ஒயரை எட்டிப்பிடிக்கும் தூரத்தில் நின்றார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள், ‘அவர் தற்கொலைக்கு முயல்வதாக’ நினைத்துத் திரண்டனர். தகவலறிந்ததும், சத்துவாச்சாரி போலீஸார் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவரை கீழே இறங்குமாறு கூறினர். அவர் ‘ரூ.2 கோடி கொடு... அப்பத்தான் மரத்தில் இருந்து கீழே இறங்குவேன்’ என்றார். அவரின் பேச்சுகள் முன்னுக்குப் பின் முரணாக இருந்தது. அதன் பிறகே, அவர் மனநோயாளி என்பது போலீஸாருக்குத் தெரியவந்தது.

மின் ஒயரை அவர் பிடிக்காமல் இருக்க உடனடியாக மின்வாரிய ஊழியர்களும் போலீஸாரும் துரிதமாகச் செயல்பட்டு மரத்தில் ஏறி அவரை பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தனர். கீழே இறங்கியவுடன், அங்கிருந்தவர்களைக் குச்சியை எடுத்து அவர் தாக்க முற்பட்டார். பின்னர், போலீஸார் உணவு வாங்கிக் கொடுத்து சாப்பிட வைத்தனர். திருப்பத்தூரில் உள்ள ‘உதவும் உள்ளங்கள்’ தன்னார்வ அமைப்புக்கு போலீஸார் போன் செய்தனர். அவர்கள், ‘எங்களுக்கு வேறு வேலை இருக்கிறது’ என்று கூறி அழைப்பைத் துண்டித்தனர். இதனால் போலீஸார் கடுப்பாகினர்.

மரத்தில் ஏறி முதியவரை மீட்டும் போலீஸார்

வேலூர் மாவட்டத்தில் இதுபோன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமாகச் சுற்றித்திரிகிறார்கள். அவர்களால் விபத்துகளும் ஏற்படுகிறது. பொதுமக்கள் பாதிக்கப்படும் அதே நேரத்தில் மனநோயாளிகளும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், கொள்ளையர்கள் என்று பொதுமக்களால் சந்தேகிக்கப்பட்டுத் தாக்குதலுக்கும் ஆளாகின்றனர். மாவட்ட நிர்வாகம், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு மனநோயாளிகளை மீட்கத் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.