வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (14/12/2018)

கடைசி தொடர்பு:19:00 (14/12/2018)

`என்னிடம் பேசுறாங்க; அடுத்து தினகரன் கூடாரம் காலி! - ஷாக் கொடுக்கும் அரசு கொறடா ராஜேந்திரன்

அ.தி.மு.க-வை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துகொண்டிருக்கிறார்கள்' இன்னும் வெகு விரைவில் தினகரன் கூடாரமே காலியாகும்" என அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் அதிரடியாகப் பேசியிருக்கிறார்.

                                          

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் அ.தி.மு.க பூத் அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். ``செந்தில் பாலாஜி வேறு இயக்கத்திலிருந்துதான் அ.தி.மு.க.வுக்கு வந்தவர். அவர் கழகம் விட்டு கழகம் மாறுவது ஒன்றும் புதிதல்ல. அவர் எந்தக் கழகத்துக்கு எப்போது போவார், எப்போது வருவார் என்பது யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அவர் பச்சோந்தி போலக்கட்சி தாவிக் கொண்டே இருப்பார்.

                                               

 

அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அமுமுக தொண்டர்கள் தாய் கழகமான அ.தி.மு.க-வில் இணைவதாக இரண்டு நாள்களாக என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தினகரன் அணியில் இருப்பவர்கள் சாரை சாரையாக அ.தி.மு.க-வில் சேரத் தயாராக உள்ளனர். இன்று வரையிலும் நிறைய பேர் எங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். வெகு விரையில் தினகரன் கூடாரம் காலியாகும். அந்த நாள்கள் வந்துகொண்டிருக்கிறது.

                                               

அத்தோடு, ஜெயலலிதாவின் ஆசியோடு ஆட்சியைச் சிறப்பாக நடத்தும் எடப்பாடியார் அணியில் யார் வேண்டுமானாலும் வந்து சேரலாம். வரக்கூடிய எந்தத் தேர்தல்களாக இருந்தாலும் அ.தி.மு.க-வே ஜெயிக்கும். இந்தச் சாம்ராஜ்ஜியத்தை எந்தக் கொம்பனாலும் அசைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று பகல் கனவு கண்டவர்கள் எல்லாம் கனவு கண்டுகொண்டே இருக்கட்டும்" என்று தடதடக்க பேசிமுடித்தார்.