’நெல்லையப்பர் கோயிலுக்குள் இரவில் நுழைந்த மர்ம நபர்!’ -அதிகாரிகள் விசாரணை | unknown man entered into nellaiyappar temple

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (14/12/2018)

கடைசி தொடர்பு:23:00 (14/12/2018)

’நெல்லையப்பர் கோயிலுக்குள் இரவில் நுழைந்த மர்ம நபர்!’ -அதிகாரிகள் விசாரணை

பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோயிலுக்குள் இரவு நேரத்தில் மர்ம நபர் நுழைந்த விவகாரம் வெளியில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம்குறித்து காவல் துறை மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகிறார்கள். 

நெல்லையப்பர் கோயில்

நெல்லையின் அடையாளங்களுள் ஒன்றான நெல்லையப்பர் கோயில், 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பாரம்பர்யம் மிகுந்த இந்தக் கோயிலில், ஐம்பொன் சிலைகள் உள்ளன. அதற்காக கோயிலின் உள்ளேயே சிலைகள் பாதுகாப்பு மையம் உள்ளது. இந்த மையத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள சில கோயில்களின் ஐம்பொன் சிலைகளும் பாதுகாப்பு கருதி வைக்கப்பட்டுள்ளன. பல லட்சம் மதிப்புள்ள இந்தச் சிலைகளைப் பாதுகாப்பதற்காக இரவும் பகலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுவருகின்றனர்.

கோயிலின் உள்ளே இருக்கும் சிலைகள் பாதுகாப்பு மையத்தில், பகலில் இரு காவலர்கள் பாதுகாப்புக்காக இருப்பது வழக்கம். அதேபோல இரவு நேரத்தில் ஒரு காவலரும், கோயிலைச் சேர்ந்த 4 பாதுகாவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில், 13-ம் தேதி இரவு கோயிலின் நடை சாத்தப்பட்ட பின்னர், பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் வழக்கம்போல தங்களின் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

நள்ளிரவு நேரத்தில் கோயிலின் சிலைகள் பாதுகாப்பு மையம் அருகில் திடீரென சத்தம் கேட்டுள்ளது. அதைக் கவனித்த கோயிலின் பாதுகாவலர்கள் அலர்ட் ஆகி, அந்த இடத்துக்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கே பாதுகாப்புக்காக இருந்த போலீஸுடன் வேறொரு நபரும் இருந்துள்ளார். அந்த நபர் மதுபோதையில் இருந்துள்ளார். அதனால் கோபம் அடைந்த பாதுகாவலர்கள், அந்த போலீஸிடம் அவரைப் பற்றி விசாரித்துள்ளனர். 

அந்தக் காவலர், தன்னுடன் தங்கியிருந்தது தனது உறவினர் என்றும் ,அவர் மதுபோதையில் இருப்பது தெரியாமல் அழைத்து வந்துவிட்டதாகவும், அதனால் மன்னித்துக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த நபரை கோயிலில் இருந்து ஊழியர்கள் வெளியேற்றிவிட்டு, மீண்டும் கோயிலைப் பூட்டியிருக்கிறார்கள். விலை மதிக்கமுடியாத ஐம்பொன் சிலைகள் இருக்கும் பகுதியில், மது போதையுடன் மர்ம நபரைத் தங்கவைத்த காவலரின் செயல்குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ,அறநிலையத்துறை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்திவருகிறார்கள். ஆனாலும், இதுவரையிலும் காவல் நிலையத்தில் புகார் எதுவும் செய்யப்படவில்லை. நெல்லையப்பர் கோயிலின் உள்ளே இருக்கும் சிலைகள் பாதுகாப்பு மையம் அருகே மர்ம நபர் புகுந்த விவரம் வெளியான சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.