வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (15/12/2018)

கடைசி தொடர்பு:07:03 (15/12/2018)

வாட்ஸ்அப்பில் பெண்களை விமர்சித்தவர் தலைமறைவு! நண்பர்களிடம் விசாரணை 

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் என்ற கிராமத்தில் டிசம்பர் 6-ம் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தன்று அன்பழகன் என்பவர் சில சமூக பெண்களை காதலித்து திருமணம் செய்வோம் என்று சமூகவலைதளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் பிற சமூக பெண்களை திருமணம் செய்தால்தான் சாதியை ஒழிக்க முடியும் என்று கூறியிருந்தார்.

திருவள்ளூர் நடுவர் நீதிமன்றம்

இது தொடர்பாக 9-ம் தேதி அன்று கடம்பத்தூர் ஒன்றிய பா.ம.க செயலாளர் வினோத் குமார் என்பவர் மப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில் குறிப்பிட்ட சமூகப் பெண்களை அவதூறாகப் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அது தொடர்பாக அன்றைய தினம் நள்ளிரவு மப்பேடு போலீஸார் நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த சாலமன், அன்புராஜ், வினோத் என்ற மூன்று பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணி கட்சியைச் சார்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் சாலமன் மற்றும் அவரின் நண்பர்கள் யாரும் அதுபோன்று எந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்றும் அவர்கள் அவர் எந்த வீடியோவையும் வெளியிடவும் இல்லை. எந்த கோஷமும் போடவில்லை என்று வழக்கறிஞர் சந்தோஷ் தெரிவித்தார். இன்று திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மூவர் மீதான ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. 

சாலமன்

ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. நீதிமன்றம் தொடங்கியதும் திருவள்ளூர் போலீஸ் தரப்பில்  மேற்கண்ட மூன்று பேரை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று மனு செய்தனர். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதி சுபாஷினி ஒருநாள் மட்டும் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இன்று மாலை 5 மணிக்குத் தொடங்கி நாளை மாலை 5 மணி வரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 

விசாரணை முடிந்து அவர்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையின்போது வழக்கறிஞர்களுடன் இருக்கலாம் என்று உத்தரவிட்டார். இதுதொடர்பாக சாலமன் வழக்கறிஞர் சந்தோஷ் கூறுகையில், ``போலீஸார் எந்த வித முகாந்திரமும் இல்லாமல் இந்த மூன்று பேரையும் கைது செய்திருப்பது தவறு. இவர்களுக்கும் சம்பந்தப்பட்ட வீடியோ வெளியிட்டதற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. எந்த காரணத்துக்காக போலீஸார் இவர்களைக் கைது செய்தார்கள் என்று தெரியவில்லை.

 வழக்கறிஞர் சந்தோஷ்

போலீஸார் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு எதிராகத்தான் இவர்களைக் கைது செய்திருப்பதாகவும் இவர்கள் மீது வேண்டுமென்று சாதி வன்மத்தோடு அவர்களை போலீஸார் அடித்துத் துன்புறுத்தியதாகவும் நீதிமன்றத்தில் வாதிட்டோம். போலீஸார் சரியாக விசாரணை செய்யாமல் இந்த 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தது தவறு என்று நாங்கள் குறிப்பிட்டோம். விசாரணையின்போது சாலமன் மற்றும் அன்புராஜ் வினோத் ஆகிய 3 பேரையும் கடுமையாக அடித்துத் தாக்கியுள்ளனர்.

இருப்பினும் இந்த மூன்று பேர் மீதான ஜாமீன் மனு விசாரணை முடிந்து அவர்கள் வெளியே வந்த பிறகு முறையாக நாங்கள் நீதிமன்றத்தில் போலீஸார் மீது தனியாக வழக்கு தொடுப்போம். அது தவிர மனித உரிமை கமிஷன் என அனைத்திலும் போலீஸார் மீது புகார் அளிப்போம் என்று தெரிவித்தார்.