தாய், குழந்தையின் உயிரைப் பறித்த சிம்னி விளக்கு! - தூக்கத்தில் நடந்த விபரீதம் | 'The hut was burnt ; mother and the baby killed

வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (15/12/2018)

கடைசி தொடர்பு:13:25 (15/12/2018)

தாய், குழந்தையின் உயிரைப் பறித்த சிம்னி விளக்கு! - தூக்கத்தில் நடந்த விபரீதம்

வாணியம்பாடியில் குடிசை வீடு தீப்பற்றி எரிந்த விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது பெண் குழந்தை உடல் கருகி இறந்தனர்.

சிம்னி விளக்கு விழுந்து தீயில் கருகி உயிரிழந்த குழந்தை

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி தும்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தீஸ்வரன். கட்டடத் தொழிலாளி. இவரின் மனைவி சரஸ்வதி (23), மகள் தனலஷ்மி (2). இவர்கள் வசித்துவந்த குடிசை வீட்டில் மின்சார வசதியில்லை. சிம்னி மற்றும் குத்து விளக்குகளைப் பயன்படுத்தி வந்தனர். நேற்றிரவு நந்தீஸ்வரன் பக்கத்து வீட்டில் இருந்தார். சரஸ்வதி தன்னுடைய குழந்தையுடன் வீட்டில் படுத்திருந்தார். அப்போது, சிம்னி விளக்கிலிருந்து எதிர்பாராத விதமாகக் குடிசையில் தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.

தீ மளமளவெனப் பரவியதால் வீட்டுக்குள் இருந்த சரஸ்வதியும், அவரின் குழந்தையும் தீயில் சிக்கிக்கொண்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்த நந்தீஸ்வரனும், அப்பகுதி மக்களும் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும், இந்த தீ விபத்தில் சரஸ்வதி உடல்கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தை 90 சதவிகித பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டது. வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை நள்ளிரவில் உயிரிழந்தது. இச்சம்பவம் தொடர்பாக அம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.