பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உதவும் வகையில் கோவை சிங்காநல்லூர் குளம் பராமரிப்பு! | story about nature education in coimbatore singanallur lake

வெளியிடப்பட்ட நேரம்: 13:43 (15/12/2018)

கடைசி தொடர்பு:13:43 (15/12/2018)

பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உதவும் வகையில் கோவை சிங்காநல்லூர் குளம் பராமரிப்பு!

பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உதவும் வகையில் சிங்காநல்லூர் குளத்தை, நகர்ப்புறப் பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் கல்வி மையத்தினர் (CUBE) பராமரித்து வருகின்றனர்.

பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உதவும் வகையில் கோவை சிங்காநல்லூர் குளம் பராமரிப்பு!

சிறுவர்கள் ஆலமர விழுதுகளிலும், ஆற்றங்கரைகளிலும் நேரம் கழித்தது மாறி, ஆண்ட்ராய்டில் மூழ்கிக்கொண்டிருக்கும் காலம் இது. மணல்கொள்ளையாலும், ஆக்கிரமிப்புப் பிரச்னைகளாலும் ஆற்றங்கரைகள் காற்றில் கலக்க, இங்கொன்றும், அங்கொன்றுமாக ஆலமரங்கள் நின்றுகொண்டிருக்கின்றன. இதனால், நகர்ப்புறச் சிறுவர்களுக்கும், இயற்கைக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த டிஜிட்டல், ஆண்ட்ராய்டு யுகத்திலும், கோவை சிங்காநல்லூர் குளத்தில் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக இயற்கைக் கல்வி எடுக்கப்பட்டு வருகிறது.

கோவை சிங்காநல்லூர் குளம்

கோவை, சிங்காநல்லூர் குளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில், அங்கு 160 வகை பறவைகள், 62 வகை பட்டாம்பூச்சிகள், 720 வகையிலான பல்லுயிர்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, சிங்காநல்லூர் குளத்தை, பல்லுயிர்ப் பாதுகாப்பு மண்டலமாகக் கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. மேலும், பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உதவும் வகையில் சிங்காநல்லூர் குளத்தை, நகர்ப்புறப் பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் கல்வி மையத்தினர் (CUBE) பராமரித்து வருகின்றனர். குளம் அமைந்துள்ள கரைப்பகுதியைச் சுத்தம் செய்வது, மியா வாக்கி முறையில் மரங்கள் அமைத்துப் பராமரிப்பது, பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உதவுவது எனப் பல்வேறு பணிகளில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், குளங்களின் பயன்கள் குறித்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் வகையில், மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு, இங்கு 'இயற்கைக் கல்வி' எடுக்கப்பட்டு வருகிறது.

சிங்காநல்லூர் குளம்

ஆர்தர் ஸ்டீல்ஆனைகட்டியில் உள்ள நீலகிரி உயிர்சூழ் மண்டல இயற்கைப் பூங்காவின் முன்னாள் இயக்குநர் ஆர்தர் ஸ்டீல், ``நகர்ப்பகுதிக்குள் இப்படி ஒரு குளம் அமைந்ததில் கோவை மக்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். தற்போது, 90 சதவிகிதம் கல்வி நான்கு சுவருக்குள் அடங்கிவிடுகிறது. ஆனால், இங்கு மாணவர்களுக்கு இயற்கை குறித்து நேரடியாகக் கல்வி எடுக்க முடிகிறது. உதாரணத்துக்கு ஒரு பட்டாம்பூச்சி, முட்டையிலிருந்து வருவதில் தொடங்கி, அதன் ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியையும் இங்கு நேரடியாகக் காணலாம். அதேபோல ஆமை முட்டையிட்டு, குஞ்சு பொறிப்பதையும் இங்கு நேரடியாகக் காணலாம். ஒரே நேரத்தில் பல ஆயிரக்கணக்கான பெலிக்கன்களையும் இங்குக் காண முடியும். நகருக்குள் வேறு எங்கும் இந்தக் காட்சிகளைப் பார்க்க முடியாது. பல நூறு கிலோ மீட்டர் தூரம் சென்று தெரிந்துகொள்வதை, நம் நகரப்பகுதியிலேயே தெரிந்துகொள்வது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய கொடை. இதன்மூலம் இயற்கை மற்றும் பல்லுயிர் குறித்து மாணவர்களின் அணுகுமுறை மாறவும் வாய்ப்பிருக்கிறது" என்றார் நெகிழ்ச்சியாக.

கலைவாணிக்யூப் அமைப்பின் உறுப்பினரும், மாணவர்களுக்கு இயற்கை கல்வி எடுப்பவருமான கலைவாணி, ``கோவையில் மற்ற குளங்களுக்கு இல்லாத சிறப்புத்தன்மை இந்தக் குளத்துக்கு இருக்கிறது. மக்களால் அதிகம் பாதிப்பு ஏற்படுத்தப்படாத ஒரு குளமாக இது இருக்கிறது. வாரத்துக்கு மூன்று நாள்கள் இங்கு இயற்கைக் கல்வி எடுத்துவருகிறோம். பள்ளியிலிருந்து வாகன ஏற்பாடுசெய்து, மாணவர்களை அழைத்துவருகிறோம். இங்கு, செடி, கொடி, மரம், பூச்சி மற்றும் பறவைகளின் முக்கியத்துவம், அவை எப்படி ஒவ்வொன்றும் தொடர்பில் உள்ளன, அப்படித் தொடர்பில் இல்லாவிடின், அவை நம்மை எப்படிப் பாதிக்கும் என்பது குறித்து பாடம் எடுப்போம். சமீபகாலத்தில், குளங்கள் எப்படியெல்லாம் பாதிப்படைகின்றன, அதை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறோம். உதாரணத்துக்கு, பிளாஸ்டிக்கின் பாதிப்பு குறித்துப் புரியவைப்பதற்காக, மாணவர்களுக்கு சாக்லேட் கொடுத்து, அந்த பாக்கெட்டில் சிறிதாகத் தண்ணீர் ஊற்றிக் காண்பிப்போம். அதில், தண்ணீர் இறங்காது. நாம் தூக்கிவீசும் குப்பைகளால் என்ன மாதிரியான பாதிப்பு வருகிறது என்பதை இப்படி எளிய முறையில் புரியவைப்போம். மழைக்காலங்களில், பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று வகுப்பெடுத்து வருகிறேன். இயற்கை வகுப்பில் கலந்துகொண்ட மாணவர்களில் எட்டுப் பேர், தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இதற்காக, திட்டங்களை (Project) தயாரிக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்" என்றார் மகிழ்ச்சியுடன்.

சிங்காநல்லூர் குளம்

விஜயகார்த்திகேயன்கோவை மாநகராட்சி கமிஷனரும், க்யூப் அமைப்பின் கௌரவத் தலைவருமான விஜயகார்த்திகேயன், ``கோவையில் உள்ள மற்ற குளங்களுக்கு சிங்காநல்லூர் குளம் முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இதைப் பல்லுயிர்ப் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தோம். அனைத்துத் தரப்பிலும் பேசி, அடுத்த ஆண்டு முதல் இங்கு விநாயகர் சிலைகளைக் கரைக்காமல் இருக்க முடிவு எடுத்துள்ளோம். பறவைகளை எளிதாகக் கண்டறிய வாட்ச் டவர் அமைக்க உள்ளோம். கோவையில் உள்ள மேலும் சில குளங்களை, சிங்காநல்லூர் குளம்போலவே மாற்றியமைக்க உள்ளோம்" என்றார்.

சிங்காநல்லூர் குளத்தில், பல்லுயிர் குறித்து மீண்டும் ஆய்வுப் பணிகள் நடந்துவருகின்றன. இம்முறை, 1000-க்கும் மேற்பட்ட பல்லுயிர்கள் ஆவணப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, இங்கு நாட்டு மரங்களை வளர்ப்பது தொடர்பாக விழிப்பு உணர்வு செய்யும் விதமாக, நாட்டு மரங்களின் நாற்றங்கால் வழங்கவும் திட்டமிட்டு வருகின்றனர்.

இந்த இயற்கைக் கல்வி மாணவர்களுக்கும், இயற்கைக்குமான இடைவெளியை படிப்படியாகக் குறைத்துவருகிறது. இங்கு வரும் மாணவர்கள் தங்களது பள்ளி மற்றும் வீடுகளைச் சுற்றி மரக்கன்றுகளை நட்டு, அவற்றைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில், இயற்கை கல்வி எடுப்பதற்காக ஒரு பள்ளிக்குச் சென்றிருக்கிறார் கலைவாணி. அப்போது, ஏற்கெனவே சிங்காநல்லூர் குளத்துக்கு வந்த மாணவர் ஒருவர், தனது வீட்டின் அருகே இருக்கும் செடி, கொடிகளைக் கண்டறிந்து, அவற்றை வரைந்து காட்டவே, நெகிழ்ந்துபோய்விட்டாராம் கலைவாணி. இப்படி எங்கும் நம்பிக்கை விதைகள் தூவப்பட்டு வருகின்றன. பரவட்டும் இயற்கை கல்வி.


டிரெண்டிங் @ விகடன்