``விவசாயக் கடன் தள்ளுபடி நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும்’' -ரகுராம் ராஜன் | Raguram Rajan talk about farmers

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (15/12/2018)

கடைசி தொடர்பு:14:10 (15/12/2018)

``விவசாயக் கடன் தள்ளுபடி நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும்’' -ரகுராம் ராஜன்

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் - பிஜேபி இரண்டு கட்சிகளின் வாக்குகளும் வெற்றிக்கும் தோல்விக்கும் நெருக்கத்தில் அமைந்திருந்தது. ஆகவே, இனிவரும் தேர்தலில் எப்படியாவது அதிக வாக்குகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டுமென்பதற்காகப் பல யூகங்களை வகுத்துக் கொண்டிருப்பார்கள். அதில் நிச்சயம் இடம்பெறுவது விவசாயிகளின் கடன் தள்ளுபடி.

ரகுராம் ராஜன்

பொதுவாகவே, அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் தவறாமல் இடம்பெறுவது விவசாயிகளின் கடன் தள்ளுபடி. இதைத்தான் கடுமையாக விமர்சித்து இருக்கிறார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன். டெல்லியில் நடைபெற்ற `இந்தியாவுக்கான நிதி வியூகம்’ என்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ``விவசாயிகள் கடன் தள்ளுபடியைத் தேர்தல் வாக்குறுதியாக அரசியல் கட்சிகள் அறிவிக்கக் கூடாது. அப்படிச் செய்வது இந்தியப் பொருளாதாரத்தில் நிதி நெருக்கடியை உருவாக்கும். விவசாயிகளின் கடன் தள்ளுபடி அவர்களின் ஆதாரமான பிரச்னையைப் போக்கக்கூடிய நிரந்தரத் தீர்வு அல்ல" எனக் கூறியிருந்தார். 

விவசாயிகள் 

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியனிடம் இதுகுறித்துப் பேசினோம்,  ``ரகுராம் ராஜன் ஓர் உலகப் பொருளாதார ஏஜென்ட். ஒரு விவசாயி ஏன் கடன் வாங்குகிறார், ஏன் அவரால கட்ட முடியாமப் போகுது. அதுக்கு நம்ம சமூக அமைப்பு எந்த அளவுக்குக் காரணமாக இருக்கு. இதெல்லாம் முன்னாள் ரிசர்வ் பேங்க் கவர்னர் ரகுராம் ராஜனுக்குத் தெரியுமா என்ன?

பி ஆர் பாண்டியன்

அவர் கவனிக்கிறதெல்லாம் உலகப் பொருளாதாரத்தை இந்தியாவுல கொண்டு வர்றது எப்படி அதன் மூலமா அந்த வெளிநாடுகளுக்கு என்ன நன்மைன்னு ரெண்டு தரப்புக்கும் தரகு வேலை பாக்குறவர். அவரெல்லாம் விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்யக் கூடாதுன்னு சொல்றதுக்கு என்ன தகுதி இருக்கு. பெருமுதலாளிகளோட, பெரிய பெரிய வங்கிகளோட கடனை எல்லாம் இந்த நாடு தள்ளுபடி செய்யும். ஆனா விவசாயி வாங்கின கடனை தள்ளுபடி செய்றதுக்கு ஆயிரம் முறை யோசிக்கும். என்னத்த சொல்றது. ரகுராம் ராஜனோட இந்தக் கருத்தை அனைத்து விவசாயக் கட்சிகளின் சார்பாக வன்மையாக் கண்டிக்கிறேன்" என்றார்.