``செந்தில் பாலாஜி சொல்வது பொய்” -`நமது எம்.ஜி.ஆர்’ சொல்லும் ஆதாரம் | Senthil Balaji's statement is lie, says Namathu MGR

வெளியிடப்பட்ட நேரம்: 14:44 (15/12/2018)

கடைசி தொடர்பு:14:44 (15/12/2018)

``செந்தில் பாலாஜி சொல்வது பொய்” -`நமது எம்.ஜி.ஆர்’ சொல்லும் ஆதாரம்

ஸ்டாலினுடன் செந்தில் பாலாஜி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆரம்பக் காலத்தில் ம.தி.மு.க, தி.மு.க-வில் பணியாற்றியவர் எனச் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்த செந்தில் பாலாஜி பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, ``ஊடகங்களில் வருகிற செய்திகளைப் போல பல்வேறு இயக்கங்களில் இருந்து வந்துவிடவில்லை. 1996-ம் ஆண்டு முதன்முறையாக கவுன்சிலருக்கு சுயேச்சையாக நின்று போட்டியிட்டேன். அதன்பிறகு அ.தி.மு.க-வில் இணைத்துக்கொண்டு பணியாற்றினேன். அம்மா மறைவு வரையில் அ.தி.மு.க-வில் இருந்தேன்.'' என சொன்னார்.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி சொல்வது அப்பட்டமான பொய். இதற்கான ஆதாரத்தைத் திரட்டியது விகடன். 2000-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதிதான் அ.தி.மு.க-வில் செந்தில் பாலாஜி இணைந்தார். அப்போதைய கரூர் ஒன்றியக் குழு தி.மு.க. பெருந்தலைவர் உட்பட 300 தி.மு.க-வினர் இணைந்தபோது தி.மு.க. கவுன்சிலராக இருந்த செந்தில் பாலாஜியும் இடம்பெற்றிருந்தார். ஜெயலலிதா முன்பு அவர் இணைந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படமும் செய்தியும் அடுத்த நாள் 'நமது எம்.ஜி.ஆர்' நாளிதழில் வெளியானது. 'நமது எம்.ஜி.ஆர்'  பத்திரிகையின் முதல் பக்கத்தில், '300 தி.மு.க-வினருடன் கரூர் ஒன்றியக் குழு தி.மு.க. பெருந்தலைவர் புரட்சித்தலைவி முன் கழகத்தில் இணைந்தனர்' எனத் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தார்கள். 

செந்தில் பாலாஜி செய்தி

`கரூர் ஒன்றியக் குழு தி.மு.க. பெருந்தலைவர் விஜயலட்சுமி ராமசாமி, ஒன்றியக் குழு துணைத் தலைவர் எம்.சி.கந்தசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர் வி.செந்தில் குமார் ஆகியோர் தி.மு.க-விலிருந்து விலகி தங்களை கழகத்தில் இணைத்துக்கொண்டனர்' எனச் செய்தியில் குறிப்பிட்டிருந்தது நமது எம்.ஜி.ஆர். செந்தில் பாலாஜியின் இயற்பெயர் வி.செந்தில் குமார். அதன்பிறகு நியூமரலாஜிக்காக தனது பெயரை செந்தில் பாலாஜி என மாற்றிக் கொண்டார். அதனால் ஜெயலலிதா முன்பு செந்தில் பாலாஜி இணைந்தபோது 'வி.செந்தில் குமார்' என்ற பெயரில்தான் அழைக்கப்பட்டார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க