மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட நர்ஸ்! - திருட்டுப் பட்டம் சுமத்தியது காரணமா? | Nurse suicide case - Police extends investigation

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (15/12/2018)

கடைசி தொடர்பு:15:00 (15/12/2018)

மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட நர்ஸ்! - திருட்டுப் பட்டம் சுமத்தியது காரணமா?

திருட்டுப் பட்டம் சுமத்தியதால் நாகர்கோவில் தனியார் கண் மருத்துவமனையின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து நர்ஸ் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருட்டுப் பட்டம் சுமத்தியதால் நாகர்கோவில் தனியார் கண் மருத்துவமனையின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து நர்ஸ் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனுஜா

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே வீயன்னூர் பகுதியைச் சேர்ந்த நல்லதம்பி - விஜிலா தம்பதியின் மகள் அனுஜா(19). அனுஜா நாகர்கோவிலில் உள்ள பெஜான்சிங் கண் மருத்துவமனையில் இரண்டு ஆண்டு படிப்பு முடித்து, அதே மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களாக செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். மருத்துவமனையில் தங்கி பணிபுரிந்துவந்த அனுஜா வாரம் ஒருமுறை வீட்டுக்குச் சென்றுவருவது வழக்கம். இந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் கண் மருத்துவமனை மூன்றாவது மாடியிலிருந்து திடீரென கீழே குதித்துள்ளார். தலையில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட அவர் நாகர்கோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அனுஜா உயிரிழந்தார். அவர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய விவரம் அவரின் பெற்றோருக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், தன் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், திருட்டுப் பழி சுமத்தி அனுஜாவை தற்கொலைக்குத் தூண்டியிருப்பதாகவும் அவரின் தாய் விஜிலா புகார் கூறியுள்ளார்.

பெஜான்சிங் கண் மருத்துவமனை

அனுஜாவின் உடலை வாங்க மறுத்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை பிணவறை முன்பு அமர்ந்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் காவல்துறை பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உறவினர்கள் கலைந்துசென்றனர். இதுகுறித்து கண் மருத்துவமனை தரப்பு கூறும்போது, செவிலியர் அனுஜா அடிக்கடி மொபைல் போனில் பேசுவதாகவும், மருத்துவமனையில் மற்றொரு செவிலியரின் தங்க நகை காணாமல் போனது குறித்து அனுஜாவிடமும் விசாரிக்கப்பட்டதாகவும், இதனால் தற்கொலை செய்துகொண்டிருப்பார் என கூறுகின்றனர். இது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.