` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை!' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு | MLA prabhu angry over link attempt with Admk

வெளியிடப்பட்ட நேரம்: 14:36 (15/12/2018)

கடைசி தொடர்பு:14:55 (15/12/2018)

` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை!' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு

நான் கேட்பது ஒன்றுதான். கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டத்தை அறிவிக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாததால்தான் அங்கிருந்து விலகி வர வேண்டிய சூழல் வந்தது.

` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை!' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு

தி.மு.க-வில் செந்தில் பாலாஜி ஐக்கியமானதை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் அ.ம.மு.க-வினரும் அ.தி.மு.க-வினரும். கொங்கு மண்டலத்தை வலுப்படுத்தும் வகையில் செந்தில் பாலாஜியின் வருகை பயன் தரும் என உடன்பிறப்புகள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவரைத் தொடர்ந்து மேலும் சில தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள் தி.மு.கவுக்கு வருவார்கள் என்ற பேச்சும் கிளம்பியிருக்கிறது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி தொகுதியின் எம்.எல்.ஏவும் தினகரன் ஆதரவாளருமான பிரபு, எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இருப்பதாகத் தகவல் பரவியது. ` அடுத்த விக்கெட் பிரபு எம்.எல்.ஏ' எனத் தகவல் பரவியதால் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர் அ.ம.மு.க நிர்வாகிகள். 

கள்ளக்குறிச்சி பிரபு

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவிடம் பேசினோம். 

நீங்கள் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியானதே? 

`` சேலத்தில் இருந்துதான் இப்படியொரு தகவல் வெளியானது. `அ.ம.மு.க-வில் கே.என்.நேரு இணைகிறார்' என்றெல்லாம் வதந்தி பரப்புகிறார்கள். செந்தில் பாலாஜி பற்றிய தகவல் வெளிவரும்போது, என்னைப் பற்றிய வதந்தியை சேலத்தைச் சேர்ந்த ஒருவர் பரப்பியிருக்கிறார். இதில் சம்பந்தப்பட்டவர்கள் வெளியில் வந்து சொன்னால் தான் நம்ப வேண்டும். இப்படி வதந்தி பரப்புவதற்கென்றே நிறைய ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள். இந்த வதந்தியை நான் பெரிதாக நினைக்கவில்லை. என்னைப் பற்றிக் கட்சித் தலைமைக்குத் தெரியும்". 

ஸ்டாலினுடன் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி சென்றதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

`` தி.மு.க-வுக்கு அவர் சென்றதை பெரிய இழப்பாகப் பார்க்கவில்லை. தலைமையும் பெரிதாக நினைக்கவில்லை. ` பணத்துக்காகவும் பதவிக்காகவும் கட்சியில் யாரும் இருக்க வேண்டாம். அம்மாவின் எண்ணத்தை ஈடேற்றும் வகையிலான தொண்டர்கள் இருந்தால் போதும். விருப்பத்தோடு உண்மையாக இருப்பவர்கள் இருக்கட்டும்' என்பதுதான் துணைப் பொதுச் செயலாளரின் எண்ணம். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மீதுள்ள வெறுப்பில், அ.தி.மு.க தொண்டர்கள் பெரும்பான்மையாக எங்கள் பக்கம் உள்ளனர். தலைவர் சரியாக இருந்தால் கட்சி நன்றாக இருக்கும். அப்படிப்பட்ட நல்ல தலைவராக டி.டி.வியைப் பார்க்கிறோம்". 

தினகரன்

அ.ம.மு.க-வில் இருந்து இன்னும் சிலர் தி.மு.கவில் இணைய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளதே? 

`` தி.மு.க-வுக்குச் செல்வதற்கு யாரும் தயாராக இல்லை. செந்தில் பாலாஜியின் மனநிலை என்ன என்பது தெரியவில்லை. ஒவ்வொருவரின் செயல்பாடுகளும் தலைமைக்குத் தெரியும். ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன பிரச்னைகள் என்பது எனக்குத் தெரியாது". 

தினகரன் ஆதரவாளராகச் செயல்படுகிறீர்கள். அ.ம.மு.க-விலும் பொறுப்பில் இருக்கிறீர்கள். தொகுதிக்குத் தேவையானதை இந்த அரசு செய்து கொடுக்கின்றதா? 

`` தொகுதிக்குத் தேவையானதை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே செய்து முடித்துவிட்டேன். இந்த அரசு உதவி செய்யாவிட்டாலும், ஒவ்வொரு துறையில் இருந்தும் தொகுதிகளுக்கு என நிதியை ஒதுக்கீடு செய்வார்கள். உதாரணமாக, கிராமப்புற மேம்பாடு உட்பட சில துறைகளிலிருந்து பணத்தை ஒதுக்கி, அடிப்படை வசதிகளைச் செய்துகொடுப்பார்கள். யார் ஆட்சியில் இருந்தாலும் இந்தப் பணிகள் நடந்துவிடும்". 

அண்ணா அறிவாலயம்

அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரும் உங்களிடம் தூது வந்தார்களா? 

`` அப்படி யாரும் பேசவில்லை. என்னை யாரும் சமாதானப்படுத்த முடியாது. நான் கேட்பது ஒன்றுதான். கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டத்தை அறிவிக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாததால்தான் அங்கிருந்து விலகி வர வேண்டிய சூழல் வந்தது. இனி அந்தப் பக்கம் செல்வதற்கான வாய்ப்பு இல்லை. அவர்கள் கொண்டு வரும் திட்டங்களும் தமிழகத்துக்குப் பாதிப்பைத்தான் கொடுக்கும். எடப்பாடி அழைப்பதால் யாரும் அவரிடம் செல்லப் போவது இல்லை. அவர் உண்மையானவராக இருந்திருந்தால், தொண்டர்கள் எங்கள் பக்கம் வந்திருக்க மாட்டார்கள்".