`தமிழகத்தில் நடைபெறுவது ராணுவ ஆட்சியா?’ - வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கேள்வி | Lawyer Vanjinathan slams TN government over sterlite issue

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (15/12/2018)

கடைசி தொடர்பு:16:01 (15/12/2018)

`தமிழகத்தில் நடைபெறுவது ராணுவ ஆட்சியா?’ - வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கேள்வி

 

வாஞ்சிநாதன்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி வருபவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவது, தமிழகத்தில் நடைபெறுவது மக்களாட்சியா, ராணுவ ஆட்சியா என்ற கேள்வியை எழச் செய்வதாக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர்  வாஞ்சிநாதன் கருத்துத் தெரிவித்திருக்கிறார். 

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வாஞ்சிநாதன், ``மதுரையில் கிரானைட் நிறுவனங்களை மீண்டும் திறக்க வேண்டும் எனக் குவாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாகத் `தாமரை யாத்திரை’ என்ற பெயரில் பி.ஜே.பி ஆதரவு தெரிவிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பி.ஜே.பி குவாரிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் விவசாயிகளைத் திரட்டி இயற்கை வளங்களுக்கு ஆதரவாக யாத்திரைகள் நடத்தப்படும். இயற்கை வளங்களை அழிக்கும் நபர்களுக்கும் தேச பொருளாதாரத்தை சீரழிக்கும் குற்றவாளிகளுக்கும் பி.ஜே.பி ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த யாத்திரையை நடத்த உள்ளது. எனவே, பி.ஜே.பி-யின் யாத்திரைக்குத் தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்.

வாஞ்சிநாதன்

தருண் அகர்வால் ஆய்வுக் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த கறுப்புத்துணி வாங்கியதற்காக கைது செய்து விசாரணை நடத்துவது அராஜக நடவடிக்கையாகும். ஸ்டெர்லைட் ஆலை திறக்க முயற்சி செய்யும் செயலுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீதான கைது நடவடிக்கை என்பதைத் தொடர்ந்து, தமிழகத்தில் நடைபெறுவது மக்களாட்சியா, இல்லை காஷ்மீர் போன்ற ராணுவ ஆட்சியா என்று சந்தேகத்தை எழுப்புகிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் காவல்துறை கண்காணிப்பாளரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகச் செயல்படுவதால் இருவரையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் காஷ்மீர் போன்று காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அரசியல் கட்சியினர் தூத்துக்குடி சென்று மக்களை சந்திக்க வேண்டும். ஸ்டெர்லைட் போராட்டக்குழு ஆலோசகராக இருக்கும் என்னை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய தமிழக அரசு முயல்கிறது. சி.பி.ஐ விசாரணையில் காவல்துறைக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்களைக் கைது செய்து மிரட்டி விசாரணைக்குச் செல்வதைத் தடுக்க அரசு தொடர்ந்து செயல்படுகிறது. அரசின் இந்தச் செயல் வருத்தம் அளிக்கிறது’’ என்றார்.