`தி.மு.க-வில் சீட் தரலைன்னு சுயேச்சையா போட்டிபோட்டவர் செந்தில்பாலாஜி!’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் | Minister MR Vijayabaskar slams former Minister Senthil Balaji

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (15/12/2018)

கடைசி தொடர்பு:17:00 (15/12/2018)

`தி.மு.க-வில் சீட் தரலைன்னு சுயேச்சையா போட்டிபோட்டவர் செந்தில்பாலாஜி!’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சென்னையில் நேத்து, ``சுயேச்சையாக ஒன்றிய கவுன்சிலராகி, அ.தி.மு.க-வுக்கு வந்தவன் நான்'னு செந்தில்பாலாஜி பொய் சொல்லி இருக்கிறார். தி.மு.க-வில் சீட் கொடுக்கலன்னு சுயேச்சையா நின்னு 7 ஓட்டுகள்ல ஜெயிச்சவர். அப்புறம், தி.மு.க கரூர் ஒன்றிய துணை தலைவர் பதவி கொடுக்கலன்னு சொல்லி அ.தி.மு.க-வுக்கு வந்தார். இப்படி பதவிக்காக எந்தப் பொய்யையும் அவர் சொல்வார்’’ என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செந்தில் பாலாஜியை விமர்சித்திருக்கிறார்.

          அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும் கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த அவரது பதவியை சமீபத்தில் வெளிவந்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு பறித்தது. அதோடு, `அ.ம.மு.க-வும் அ.தி.மு.க-வும் இணைய பேச்சுவார்த்தை நடக்கிறது’ என்று எழுந்த பரபரப்பு தகவலைத் தொடர்ந்து, தி.மு.க-வுக்கு மாற முடிவெடுத்தார். தன் ஆதரவாளர்களோடு நேற்று சென்னை அறியாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் அவர் இணைந்தார். அப்போது பேட்டியளித்த அவர், ``ஊடகங்களில் சொல்வதுபோல் நான் அரசியலை தி.மு.க-வில் இருந்து ஆரம்பிக்கவில்லை. சுயேச்சையாக நின்று ஒன்றிய கவுன்சிலராகி, அதன்மூலம் அ.தி.மு.க-வுக்கு வந்தேன்" என்றார். அவரது இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. ``தி.மு.க, ம.தி.மு.க அதன் பின்னர் தி.மு.க, அ.தி.மு.க, அ.ம.மு.க என்றுதான் அவரது அரசியல் பயணம் இருந்தது. ஆனால், அப்பட்டமா பொய் சொல்லி இருக்கிறார்’’ என்று கரூர் மாவட்டத்தில் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. 

ஸ்டாலினுடன் செந்தில் பாலாஜி

இந்தச் சூழலில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செந்தில் பாலாஜியைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``கரூர் மாவட்டத்தில் படிக்கும் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு 13,840 இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று மட்டும் 10 அரசுப் பள்ளிகளுக்கு 92 லட்சம் மதிப்புள்ள விலையில்லா  மிதிவண்டிகள் வழங்கியுள்ளோம்" என்றார்.

அவரிடம் நிருபர்கள், ``செந்தில் பாலாஜி அ.தி.மு.க அரசை மக்கள் விரோத அரசு என்று விமர்சித்துள்ளாரே’’ என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அவர், ``தமிழ அரசு மக்கள் விரோத அரசா, இல்லையா என்பதை மக்கள்தான் முடிவு பண்ணணும். நேற்று ஒரு கட்சி இன்று ஒரு கட்சி என இருப்பவர்கள் மக்கள் விரோத அரசுன்னு சொல்றது வேடிக்கை. இவரே இதுக்கு முன்னாடி இந்த அரசில் இருந்தார். பதவிக்காகக் கட்சி மாறிப் போயிட்டு, `மக்கள் விரோத அரசு’ன்னு பேசிக்கிட்டு இருக்கார்.

தி.மு.க-வுக்கு ஆள் இல்லாம எங்ககிட்ட இருந்து அ.ம.மு.க போயி, அங்கிருந்து தி.மு.க-வுக்குப் போயிருக்கிறவரை வச்சுக்கிட்டு அரசியல் பண்ற நிலைமை தி.மு.க-வுக்கு ஏற்பட்டிருக்கு. அதுதான் வருத்தப்பட வேண்டியது. கரூர்ல உள்ள 4 தொகுதிகளிலும் தி.மு.க ஜெயிக்கும்னு செந்தில் பாலாஜி சொல்லி இருக்கார். ஆனா, `234 தொகுதிகளிலும்தான் ஜெயிக்கும்'ன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. அதெல்லாம் நடக்குற காரியமா? அவர் நேராக அ.தி.மு.க-வுலதான் அரசியலைத் தொடங்கியதா பெரிய பொய்யைச் சொல்லி இருக்கார். ம.தி.மு.க-வுல அவர் இருந்த நோட்டீஸ் இருக்கு. தி.மு.க-வுல சீட் தரலைன்னுதான்,1996-ல் சுயேச்சையா நின்னு 7 ஓட்டுகள்ல ஒன்றிய கவுன்சிலர் ஆனார். அப்புறம் தி.மு.க-வுக்கு மறுபடியும் போய், அங்க கரூர் ஒன்றிய துணைத் தலைவர் பதவி கொடுக்கலன்னுதான் அ.தி.மு.க-வுக்கு வந்தார். அவரை அ.தி.மு.க-வுல சேர்த்தவர் இங்கதான் இருக்கார். ம.தி.மு.க, தி.மு.க, அ.தி.மு.க, அ.ம.மு.க-ன்னு மாறி இப்ப தி.மு.க-ன்னு இருக்கார். அதுதான் கடைசி" என்றார்.