`செந்தில் பாலாஜியை சேர்த்ததுக்காக தி.மு.க தலைமை வருத்தப்படும்!’ - அ.தி.மு.க முன்னாள் மாவட்டச் செயலாளர் | DMK will regret for it later, ADMK karur former district secretary over senthil balaji issue

வெளியிடப்பட்ட நேரம்: 17:26 (15/12/2018)

கடைசி தொடர்பு:17:39 (15/12/2018)

`செந்தில் பாலாஜியை சேர்த்ததுக்காக தி.மு.க தலைமை வருத்தப்படும்!’ - அ.தி.மு.க முன்னாள் மாவட்டச் செயலாளர்

``செந்தில் பாலாஜி நேரடியாக அ.தி.மு.க-வில் இருந்துதான் அரசியலைத் தொடங்கியதா நேற்று சொன்னது முற்றிலும் பொய். அவர் பொய் சொல்றதுல வல்லவர். தி.மு.க-வுல இருந்துதான் அ.தி.மு.க வந்தார். மாவட்டச் செயலாளராக அப்போது இருந்த நான்தான் அவரை கட்சியில் சேர்த்தேன்’’ என்று நம்மிடம் தெரிவித்தார் அ.தி.மு.க முன்னாள் மாவட்டச் செயலாளர் ஷாகுல் ஹமீது.

     கடந்த 2000-ல் செந்தில்பாலாஜி அ.தி.மு.கவில் இணைந்தபோது எடுத்த படம்

 அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும் கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த அவரது பதவியை சமீபத்தில் வெளிவந்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு பறித்தது. அதோடு, `அ.ம.மு.க-வும்,அ.தி.மு.க-வும் இணைய பேச்சுவார்த்தை நடக்கிறது’ என்று எழுந்த பரபரப்புத் தகவலைத் தொடர்ந்து, தி.மு.க-வுக்கு மாற முடிவெடுத்தார். அவரை சமாதானப்படுத்த டி.டி.வி.தினகரன் எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது. தன் ஆதரவாளர்களோடு நேற்று சென்னை அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார். அப்போது பேட்டியளித்த அவர், ``ஊடகங்களில் சொல்வதுபோல் நான் அரசியலை தி.மு.க-விலிருந்து ஆரம்பிக்கவில்லை. சுயேச்சையாக நின்று ஒன்றிய கவுன்சிலராகி, அதன்மூலம் அ.தி.மு.க-வுக்கு வந்தேன்" என்றார். செந்தில் பாலாஜியின் இந்தப் பேச்சு கரூர் அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஷாகுல் ஹமீது

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் மாவட்டச் செயலாளர் ஷாகும் ஹமீது, ``கடந்த 2000-ம் ஆண்டு செந்தில்பாலாஜி தி.மு.க-விலிருந்து அ.தி.மு.க-வுக்குத் தாவியபோது நான்தான் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் ஆக்கினேன். அப்போது அம்மாவிடம் தேதி வாங்கி அவரை கட்சியில் இணைக்க நான் ரொம்ப மெனக்கெட்டேன். ஆனா, அவர் அதன் பிறகு `வளர்த்த கிடா மார்பில் பாய்ந்ததுபோல்’ என்னையே ஓரங்கட்டினார். செந்தில் பாலாஜி பொய் சொல்வதில் வல்லவர். ஆனால், பொய்யைப் பொருந்த சொல்ல வேண்டாமா. முதலில் தி.மு.க-வில் 2000-ம் ஆண்டு மண்மங்கலம் வார்டில் ஒன்றிய கவுன்சிலராக இருந்தார். அப்போது, தி.மு.க சார்பில் கரூர் ஒன்றியத் தலைவராக விஜயலட்சுமி ராமசாமியும், துணைத்தலைவராக எம்.சி.கந்தசாமியும் இருந்தாங்க. அப்போது, செந்தில்குமார் என்கிற ஒரிஜினல் பெயரோடு இருந்த செந்தில் பாலாஜி, அவர்கள் இருவரோடு என் தலைமையில் போய் அம்மா முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தார்.

2000 ல் தி.மு.கவில் இருந்து அ.தி.மு.கவில் செந்தில்பாலாஜி இணைந்த நமது எம்.ஜி.ஆர் செய்தி..

அதன் பிறகு, கரூர் சின்னசாமி, நான் உட்பட பலரையும் அவர் கட்சிப் பணிகளில் ஓரங்கட்டினார். முன்னாள் எம்.எல்.ஏ வடிவேலையும் ஓரங்கட்டினார். ஆனால்,இவ்வளவையும் பண்ணிட்டு, இன்னைக்கு பதவிக்காகக் கட்சி மாறிட்டார். ஆனால், முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் சாட்சி நான் இருப்பதையும் மறந்து, `ஊடகங்கள் சொல்வதுபோல் தி.மு.க-விலிருந்து அ.தி.மு.க-வுக்குப் போகல. நேரடியாக அ.தி.மு.க-வில் இருந்துதான் அரசியலை ஆரம்பித்தேன்'னு சொல்லி இருக்கார். இது எவ்வளவு பெரிய பொய். என்னைவிடுங்கள். அவரை அ.தி.மு.க-வுக்கு அழைத்து வந்த விஜயலட்சுமி ராமசாமி இப்போது வாங்கலில்தான் வசிக்கிறார். அவர்கிட்ட கேட்டா, உண்மையை சொல்லிடுவார். இப்போது அவர் போய் சேர்ந்திருக்கும் தி.மு.கவில் இருப்பவர்களுக்குத் தெரியாதா இவர் சொல்றது பொய்ன்னு. ஆரம்பத்திலேயே இப்படி பொய் சொல்ற அவரை நம்பி தி.மு.க-வுக்கு அழைத்துக் கொண்டதற்கு அந்தக் கட்சி தலைமை பின்னாடி வருத்தப்படும்" என்றார்.