வெளியிடப்பட்ட நேரம்: 18:36 (15/12/2018)

கடைசி தொடர்பு:18:36 (15/12/2018)

`இது இறுதித்தீர்ப்பு அல்ல; மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை!’ - தூத்துக்குடி ஆட்சியர்

`ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என்ற தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு, இறுதித்தீர்ப்பு அல்ல. தீர்ப்பைக் கண்டு பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். ஆலையை மூடுவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது' எனத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் எனச் சில  நிபந்தனைகளுடன் வேதாந்தாவுக்குத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்தும் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் எங்களது அடுத்தகட்டப் போராட்டங்கள் தொடரும் என்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, “ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என வேதாந்தாவுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது எனபது இறுதியான  தீர்ப்பு அல்ல. தமிழக அரசு, தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

ஆலைக்கு எதிராகத் தமிழக அரசின் சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும். எனவே, பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. ஆகவே, பொதுமக்கள் இந்தச் சூழ்நிலையில் போராட்டங்கள் நடத்திட வேண்டிய அவசியம் இல்லை. பாதுகாப்பு பணிகளுக்காக வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கிறார்கள்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க