`எங்கள் வீட்டு பிள்ளைகளை’ - இழந்துவிட்டோம் தென்னை விவசாயிகள் உருக்கம்! | Farmers feeling sad for their Coconut trees

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (15/12/2018)

கடைசி தொடர்பு:20:30 (15/12/2018)

`எங்கள் வீட்டு பிள்ளைகளை’ - இழந்துவிட்டோம் தென்னை விவசாயிகள் உருக்கம்!

கஜா புயலில் தென்னை மரங்களை இழந்து இன்றோடு 30 நாள் ஆகின்ற நிலையில் அதை பட்டுக்கோட்டையில் விவசாயிகள் 30 வது நாள் துக்க தினமாக அனுசரித்து தென்னைக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தியது உருக்கத்தை ஏற்படுத்தியது.

தென்னை

கஜா புயலில் டெல்டா மாவட்டங்களில் 70 லட்சத்துக்கும் அதிகமான தென்னை மரங்கள் வேரோடும் முறிந்தும் விழுந்து சேதமடைந்தன. தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தாடு ஆகிய பகுதிகளில் விவசாயிகளின் பெரும் வாழ்வாரதமாக நம்பி இருந்த 45 லட்சம் அளவிலான தென்னை மரங்கள் விழுந்த சேதமடைந்ததில் விவசாயிகளில் பெரும் விரகத்தில் உள்ளனர். மேலும், விழுந்த தென்னை மரங்களை அகற்ற மரம் ஒன்றுக்கு அரசு 1,100 ரூபாய் அறிவித்திருந்தன. ஆனால், இந்த நிவாரணத் தொகை போதாது மரத்துக்கு 5,000 ரூபாய் வரை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் 30 நாள்கள் கடந்த நிலையிலும் விழுந்த தென்னை மரங்களை விவசாயிகள் அகற்ற பணமும் வழியும் இல்லாததால் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்து வருகின்றனர்.

தென்னை


இந்நிலையில் பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதி தென்னை விவசாயிகள், பெண்கள், டெல்டா இளைஞர் எழுச்சி மற்றும் டெல்டா காக்கும் கரங்கள் என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் நுாற்றுக்கணக்கானோர், பட்டுக்கோட்டை காசாங்குளம் வடகரையில் புயலால் விழுந்த தென்னை மரத்துக்கு மாலை அணிவித்து 30 வது நாள் துக்கம் அனுசரித்து அஞ்சலி செலுத்தினர். மேலும், அந்த இடத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதி வழியாகப் பேரணியாகச் சென்றனர். 

பேரணியில் கலந்துகொண்ட விவசாயிகள், பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் தென்னம் பிள்ளைகளை நம்பித்தான் பல கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் இருந்து வந்தனர். பிள்ளைகளின் படிப்பு, திருமணம் என அனைத்துக்கும் ஆதாரமாக இருந்து பிள்ளைகள்போல் உதவியது தென்னைம்பிள்ளைகள்தான். தென்னை மரத்தை நம்பி விவசாயிகள் மட்டுமல்ல; அதைச் சார்ந்த தொழில்களான தேங்காய் வியாபாரிகள், மட்டைத்தொழில், கீற்று பின்னுதல், கொப்பரைத் தேங்காய் என இவற்றை நம்பியிருக்கும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீண்டும் இழந்த வாழ்வாதாரத்தை மீட்க 10 வருடங்கள் வரை ஆகும். பல குடும்பங்கள்  என்ன செய்வதெனத் தெரியாமல் விக்கித்து நிற்கும் நிலையில் எங்கள் வீட்டுப் பிள்ளைகளை (தென்னை) இழந்து 30 நாள் ஆகிறது. இதைத் துக்க தினமாக அனுசரித்து அஞ்சலி செலுத்தியதோடு பேரணியும் சென்றோம் எனக் கண்ணீர் மல்க உருக்கத்துடன் கூறினார்கள். மேலும், தென்னை விவசாயிகளின் பிள்ளைகளின் கல்வி கட்டணத்தை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். விவசாயத்துக்காக அரசு, தனியார், கூட்டுறவு, சுயஉதவி, தேசிய வங்கிகளில் உள்ள கடனை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். விழுந்த தென்னை மரங்களை அகற்ற கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். அத்துடன் தென்னை மரங்களை அகற்றவும், மறு உற்பத்தி செய்ய இலவசமாகத் தென்னங்கன்றுகளையும் அரசு உடனே வழங்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தினர்.