வெளியிடப்பட்ட நேரம்: 19:52 (15/12/2018)

கடைசி தொடர்பு:19:52 (15/12/2018)

அமைச்சர்களுக்கு ஆறுமுகசாமி ஆணையம் அழைப்பு! - இறுதிக்கட்டத்தை எட்டியது விசாரணை!

வேகமாகிறது ஆறுமுகசாமி ஆணைய விசாரணை; விரைவில் வரும் அறிக்கை!

ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு வழங்கப்பட்ட கூடுதல் கால அவகாசம், வரும் பிப்ரவரி 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஏற்கெனவே, மூன்று முறை கால நீட்டிப்பு தரப்பட்டுள்ளதால், இருக்கின்ற காலஅவகாசத்துக்குள் விசாரணையை முடிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, விசாரணையை வேகப்படுத்தியுள்ளது. 

சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மூன்று நாள்களுக்கு முன்பு, ஆணையத்தில் ஆஜராகி, விளக்கம் அளித்துச் சென்றார். இந்நிலையில், வரும் புதன்கிழமையன்றும் ஆஜராகுமாறு, அவருக்கு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. அதே நாளில், துறையின் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆகியோரும் ஆஜராகுமாறு ஆணையம் அழைத்துள்ளது. 

ஜெயலலிதா மரணம்

அவர்களையடுத்து, வியாழனன்று, துணை முதல்வர் ஓ.பி.எஸ், ஜெயலலிதாவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பெருமாள் சாமி, ஐ.பி.எஸ் அதிகாரி சுதாகர் ஆகியோரையும் விசாரணைக்கு வருமாறு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அமைச்சர்களை முதன் முறையாக விசாரித்து வருவதால், விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதனால், உரிய காலத்துக்குள் விசாரணை முடிந்து அறிக்கை தாக்கல் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.