`சுதந்திரம் கிடைச்சு இத்தனை வருஷமாகியும் பஸ் வசதி இல்லை!’ - கால்நடைகளுடன் மலையில் குடியேறிய மக்கள் | Sivagangai village people staged protest over bus facility

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (15/12/2018)

கடைசி தொடர்பு:21:45 (15/12/2018)

`சுதந்திரம் கிடைச்சு இத்தனை வருஷமாகியும் பஸ் வசதி இல்லை!’ - கால்நடைகளுடன் மலையில் குடியேறிய மக்கள்

`இந்தியா சுதந்திரம் அடைந்தும் எங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. அன்றிலிருந்து இன்று வரை பஸ் வசதியில்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். எங்களை யாரும் கண்டு கொள்ளாததால் ஊரைவிட்டு காலிசெய்து வெள்ளமலையில் குடியேறி இருக்கிறோம்’ என்று கூறி ஒரு கிராமமே சமையல் செய்து போராட்டம் நடத்தியதால் சிவகங்கை மாவட்ட நிர்வாகம் பரபரப்பாகியிருக்கிறது. 

கிராம மக்கள் போராட்டம்

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் வலையராதினிப்பட்டி கிராமத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினருடன் வசிக்கின்றனர். இக்கிராமத்தினருக்கு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து பேருந்து வசதி இல்லை. இக்கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் 5 கி.மீ  தூரத்திலுள்ள கீழப்பூங்குடி அரசுப் பள்ளியில் படிக்கின்றனர். பேருந்து வசதிக்காக 2 கி.மீ தூரமுள்ள திருமலைக்கும் 
5 கி.மீ தூரமுள்ள கீழப்பூங்குடிக்கும் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். இதுகுறித்து பல ஆண்டுகளாக ஆட்சியரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சில மாதத்துக்குமுன் ஆய்வு செய்த போக்குவரத்து துறையினர் சாலையை சீரமைக்க உத்தரவிட்டனர். அதன்படி கிராம மக்கள் ரூ.20,000 வசூலித்து 2 மாதத்துக்கு முன் சாலையை சீர் செய்தனர். அப்படி இருந்தும் பேருந்து இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. 

இந்நிலையில்,  அக்கிராமத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் ஊரை காலி செய்து அருகே உள்ள  வெள்ளமலையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மலையில் சமையல் செய்து உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கால்நடைகளையும் மலைக்குக் கொண்டு சென்றனர். 

இதுதொடர்பாக சிவகங்கை வட்டாட்சியர் ராஜா, சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் சீராளன் ஆகியோர் கிராமத்தினரோடு பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு சென்று வரும் 19-ம் தேதியன்று திருமலை வரும் அரசுப் பேருந்துகளை வலையராதினிபட்டி வரை நீட்டிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனால் அக்கிராமத்தினர் போராட்டத்தை கைவிட்டு மலையைவிட்டு கீழிறங்கி கிராமத்துக்குச் சென்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க