குற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார்! - இது குளித்தலை சர்ச்சை | kulithalai police station controversy

வெளியிடப்பட்ட நேரம்: 22:01 (15/12/2018)

கடைசி தொடர்பு:22:01 (15/12/2018)

குற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார்! - இது குளித்தலை சர்ச்சை

 'காவல்நிலைய லிமிட்டிற்குட்பட்ட பகுதிகளில் குற்றங்கள் பெருகியதற்கும்,காவலர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டதற்கும் காரணம் தெற்கு பார்த்து இருக்கும் வாசல்தான்' என்று வாஸ்து நிபுணர்கள் சொன்னதால் வாஸ்துபடி மேற்கு பார்த்து வாசலை அமைத்து சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார்கள் குளித்தலை சட்டம் ஒழுங்கு காவல்நிலைய போலீஸார்.

வாஸ்துபடி மேற்கு பக்கம் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவுவாயில்...

கரூர் மாவட்டம், குளித்தலையில் கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் நீதிமன்றம் அருகே இயங்கி வருகிறது சட்டம் ஒழுங்கு காவல்நிலையம். கடந்த 2010 ம் ஆண்டுதான் இந்த காவல்நிலையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் நுழைவுவாயில் தெற்கு பார்த்து கட்டப்பட்டது. ஆனால்,இந்த காவல்நிலையத்தின் வாசற்படி மேற்கு திசை பார்த்து அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில வருடங்களாக பெரும் குற்ற வழக்குகளும், கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றங்களும் அதிகரித்துள்ளன. அதோடு, இந்த காவல்நிலையத்திற்கு பணிக்கு வரும் அதிகாரிகளும் பல இன்னல்களுக்கு ஆளாகி, உடனடியாக பணிமாற்றம், பணியிடை மாற்றம், லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கைகளால் சிக்கல் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகி வந்தார்களாம். இதனால், ஆடிப்போன இங்கு பணிபுரியும் போலீஸார், ஜோசியம் பார்த்தார்களாம். அப்போதுதான், 'வாஸ்துபடி காவல் நிலையம் சரியில்லை' என்று ஜோசியர் சொன்னாராம். அவரிடமே அதற்கு போலீஸார் பரிகாரம் கேட்க, 'காவல்நிலைய நுழைவு வாயிலை மேற்கு பக்கமாக அமைங்க' என்று சொல்லி அனுப்பினாராம்.

வாஸ்துபடி மேற்கு பக்கம் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவுவாயில்....

உடனே மகிழ்ந்த போலீஸார், கடந்த மாதமே காவல்நிலையத்தின் தெற்கு பகுதி நுழைவு வாயிலை மூடிவிட்டு, வாஸ்துபடி மேற்கு பகுதியில் புதிய நுழைவு வாயிலை அமைத்துள்ளனர். இதன்பிறகு,'தங்கள் பிரச்னைகள் குறைந்ததோடு,பல ஆச்சர்ய சம்பவங்களும் நடந்ததாக' அங்கு பணியாற்றும் போலீஸார் குதூகலத்துடன் சொல்கிறார்கள்.

இதுபற்றி,நம்மிடம் பேசிய போலீஸார், ``வாசலை வாஸ்துப்படி மாற்றிய பிறகு இங்கு பணிபுரியும் போலீஸார் ஒருவரது வீட்டில் கொள்ளைப் போன நகை, பணம் ஆகியவை திரும்பக் கிடைத்தது. இங்குள்ள டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ரொம்ப காலம் மாட்டாமல் டிமிக்கி கொடுத்த குற்றவாளிகள் பிடிப்பட்டனர். கொள்ளைப் போன பணமும் மீட்கப்பட்டது. மேலும், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நீண்ட நாள்களாக தேடி வந்த குற்றவாளிகள் உடனுக்குடன் மாட்டி வருகின்றனர். அதோடு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குளித்தலை காவல்நிலையத்தில் புகார் அளிக்க நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் மனுக்களுடன் காத்துக் கிடந்தனர். ஆனால், வாஸ்துபடி நுழைவு வாயிலை மாற்றியபிறகு, அப்படி புகார் மனு கொடுக்க வரும் மக்கள் கூட்டம் குறைந்துவிட்டது. இங்கே பணிபுரியும் எல்லா காவலர்களும் பணி நெருக்கடி இல்லாமல், முன்பு போல் எந்த பிரச்னைகளும் இல்லாமல் நிம்மதியாக பணியாற்றி வருகிறோம். இப்போது இங்கு பணிபுரியும் எங்கள்ல யாரும் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் மாட்டுவதில்லை" என்றார்கள் பெருமூச்சோடு!.