`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது!’ - கமல் | Kamal tweet about election Alliance

வெளியிடப்பட்ட நேரம்: 20:47 (15/12/2018)

கடைசி தொடர்பு:20:54 (15/12/2018)

`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது!’ - கமல்

`குறுகிய கால ஆதாயத்துக்காக அரசியலுக்கு வரவில்லை. வதந்திகளை நம்பாதீர்கள்’ என மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல் தெரிவித்துள்ளார். 

கமல்


மறைந்த தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காகக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் வர உள்ளனர். அப்போது கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும், தொகுதி பங்கீடுகள் உறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. நாளை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது, கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் தொகுதி ஒதுக்கப்படும் எனவும், தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைவதாகத் தகவல்கள் வெளியானது.

கமல் ட்வீட்

மக்கள் நீதி மய்யம் சார்பில் இந்தத் தகவல் குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்த நிலையில், அக்கட்சியின் நிறுவனர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர், ``மக்கள் நீதி மய்யம் @maiamofficial உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும், நான் அரசியலுக்கு வந்த காரணத்தை நாம் உணர்வோம். அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல. வதந்திகளை நம்பாதீர். மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம். #நாளைநமதே'' என்று பதிவிட்டுள்ளார்.