டெம்போ மோதியதில் குளத்தில் கவிழ்ந்த பஸ் - ஐயப்ப பக்தர்களை பத்திரமாக மீட்டப் பொதுமக்கள்! | bus accident near by Thuckalay

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (16/12/2018)

கடைசி தொடர்பு:04:00 (16/12/2018)

டெம்போ மோதியதில் குளத்தில் கவிழ்ந்த பஸ் - ஐயப்ப பக்தர்களை பத்திரமாக மீட்டப் பொதுமக்கள்!

சபரிமலை சென்றுவிட்டு கன்னியாகுமரிக்கு வந்த ஆந்திர ஐயப்ப பக்தர்களின் பஸ் எதிர்பாராத விதமாகக் குளத்தில் கவிழ்ந்தது. பொதுமக்கள் உடனடியாக மீட்டனர்.

விபத்துக்குள்ளான பஸ்


சபரிமலை புனித பயணம் செல்லும் ஐயப்ப பக்தர்கள் பின்னர் கேரளம் மற்றும் தமிழகத்தின் முக்கிய இடங்களுக்குச் செல்வது வழக்கம். பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி வந்து செல்கிறார்கள். இதனால் கன்னியாகுமரியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதன்படி ஆந்திராவைச் சேர்ந்த 37 ஐயப்ப பக்தர்கள் டூரிஸ்ட் பஸ்ஸில் சபரிமலை சென்றுவிட்டு திருவனந்தபுரம் வழியாகக் கன்னியாகுமரி நோக்கி இன்று வந்தனர்.

விபத்து

தக்கலைப் பகுதியை தாண்டி தோட்டியோடு பகுதியில் வரும்போது எதிரே பாறாங்கல் ஏற்றிவந்த டெம்போவும், ஆந்திர பக்தர்கள் சென்ற டூரிஸ்ட் வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் டூரிஸ்ட் வாகனம் தோட்டியோடு குளத்தில் கவிழ்ந்தது. இதைப் பார்த்த பயணிகள் உடனடியாக டூரிஸ்ட் பஸ்ஸின் கண்ணாடிகளை உடைத்து ஐயப்ப பக்தர்களை மீட்டனர். குளத்தில் செடிகள் மற்றும் புதர்கள் வளர்ந்திருந்ததால் பஸ் தண்ணீரில் முழுவதுமாக மூழ்கவில்லை.

விபத்து

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 5-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டது. டெம்போ டிரைவர் மனக்காவிளை விஜயகுமாருக்கு கால் உடைந்தது. அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து இரணியல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.