வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/12/2018)

கடைசி தொடர்பு:06:00 (16/12/2018)

`இருக்கிற கொஞ்ச, நஞ்ச பயிர்களையாவது காப்பாத்துங்க' - மடிப்பிச்சை கேட்டு போராடிய பெண்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகளின் நிலங்களில் சாய்ந்து கிடந்த மின்கம்பங்களைச் சீரமைத்து மின்சாரம் வழங்காததால், விவசாய பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலை உள்ளதாகக் கூறி புளிச்சங்காடு ஆவணம் கைகாட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலைமறியலால் ஈடுபட்டதால் 3மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பத்தது.

போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பால், 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சரிந்தன. கடந்த வாரம் வரையிலும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிமாநில மின் பணியாளர்கள் மின்கம்பங்களைச் சீரமைத்து மின்சாரம் வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், அவர்கள் அனைவரும் வீடு திரும்பிவிட்டனர். இதனால், உள்ளூர் அதிகாரிகளைக் கொண்டே மின் இணைப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருவதால், பணி தொய்வடைந்தது. 

சாய்ந்த மின்கம்பங்கள்

இந்த நிலையில், விவசாய நிலங்களில் சாய்ந்து கிடந்த மின்கம்பங்களை முழுமையாகச் சரி செய்து மின்சாரம் வழங்கப்பட வில்லை. இதனால், எஞ்சியுள்ள பயிர்களும் தண்ணீரின்றி கருகுவதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர். இந்த நிலையில், மின்வாரிய அதிகாரிகள் தகவலின் பேரில் மாவட்டத்தில் 99 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்ததைக் கண்டித்தும், விவசாய, மகளிர் சுய உதவிக்குழு கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் புளிச்சங்காடு ஆவணம் கைகாட்டி பகுதியில், தி.மு.க எம்.எல்.ஏக்கள் ரகுபதி, மெய்யநாதன் தலைமையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பட்டுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

​​​​போராட்டம்

இதையடுத்து, அங்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து, மாவட்ட எஸ்பி செல்வராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். தி.மு.க எம்.எல்.ஏக்கள் மெய்யநாதன், ரகுபதி ஆகியோர் கூறும்போது, ``புயலுக்குப் பிறகு இருக்கும் கொஞ்ச, நஞ்ச பயிர்களையாவது காப்பாற்ற விவசாயிகள் போராடிவரும் நிலையில், அதிகாரிகளின் தவறான தகவலை அமைச்சர் வெளியிடுகிறார். 99 சதவீத மின்சாரம் வழங்கப்பட்டு விட்டதாகக் கூறி மக்களை ஏமாற்றப் பார்க்கின்றனர். அந்த ஒரு சதவீத பகுதியை அவர்கள் காட்டத் தயாராக இருக்கின்றார்களா?, ‘வீடுகள் மற்றும் விவசாய பயிர்களை இழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு காலதாமதமின்றி வழங்க வேண்டும். 

போராட்டம்

மடிப்பிச்சை கேட்டு பெண்கள் நூதனம் சாலைமறியல் போராட்டத்தில் பங்கேற்ற ஏராளமான பெண்கள் மகளிர் சுயஉதவிக்குழு கடன்களை ரத்து செய்ய வேண்டும் அல்லது கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும். விவசாய, மாணவர்களுக்கான கல்விக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மடிப்பிச்சைக் கேட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.