`வைகோ அப்போ போராடியிருக்க வேண்டியது தானே?’ - கடம்பூர் ராஜூ கேள்வி! | Why did Vaiko not fight against the Sterlite plant in the DMK regime? Kadambur Raju questioned

வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (16/12/2018)

கடைசி தொடர்பு:11:10 (16/12/2018)

`வைகோ அப்போ போராடியிருக்க வேண்டியது தானே?’ - கடம்பூர் ராஜூ கேள்வி!

“முந்தைய தி.மு.க., ஆட்சியின்போது நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக இருந்த வைகோ, அப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஏன்  போராட்டம் நடத்தவில்லை. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேசி ஒரு வெளிநடப்பு கூட செய்யவில்லையே ஏன்?” என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.   

கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம் என கூறியுள்ளார். இவ்விஷயத்தில் அரசியல் கட்சியினர் தேவையற்ற கருத்துகளை கூறி மக்களை திசை திரும்ப வேண்டாம் என தமிழக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் அடைக்கலாபுரத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 22 ஆண்டு கால மக்களின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கதான் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கெனவே மே 22-ம் தேதி மக்களின் போராட்டத்தில் சில விரும்பதகாத நிகழ்வுகள் நடந்தது. அதற்கு அடுத்த நாளே 23-ம் தேதியே ஆலையை நிரந்தரமாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால், ஆலை நிர்வாகம் அந்த உத்தரவிற்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் தேசிய பசுமை தீர்ப்பாயம் உள்ளது. எனவே, பசுமை தீர்ப்பாயத்தில் தீர்ப்பு வந்த அடுத்த கனமே தமிழக முதல்வர் பழனிச்சாமி பசுமைத்தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் எனக் கூறியுள்ளார். அதற்குரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும். மக்கள் உணர்வுகளுக்கு ஏற்ப, மக்கள் உரிமைகளை பாதிக்கின்ற எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது. ஹைட்ரோ கார்பன், மேகதாது உள்ளிட்ட பிரச்சனைகளில் மக்களின் உரிமைகளுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது மனநிலைக்கு தகுந்தாற்போல் மக்களை திசை திரும்பும் வகையில் கருத்துக்களை கூறி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வைகோ போன்றவர்களால் அறிக்கை மட்டுமே விட முடியும். ஆனால், அரசு மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். தற்போது ஆவேசப்படும் வைகோ, இந்த ஆலை விவகாரத்தில் முந்தைய தி.மு.க., ஆட்சியின்போது தி,மு.க.,வுடன் ஒட்டி உறவாடிய நிலையில் இருந்த அவர் ஏன் போராடவில்லை? அப்போது அவர் நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக கூட இருந்தார். நாடாளுமன்றத்தில் இதுகுறித்து ஏன் பேசவில்லை? ஒரு வெளிநடப்பு கூட செய்யவில்லையே ஏன்?  

ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவது குறித்து மாநில அரசு உறுதி அளித்தால்தான் மக்கள் போராட மாட்டார்கள் என பா.ஜ.க., தலைவர் தமிழிசை கூறியுள்ளார். மத்தியில் ஆளும் பா.ஜ.க.,வின் மாநிலத் தலைவர் அவர், மாநில அரசுடன் இணைந்து இந்த ஆலையை மூடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விட்டுவிட்டு அவரும் மற்ற தலைவர்களைப் போல அறிக்கை விட்டுக்கொண்டிருந்தால் அது மக்களை ஏமாற்றும் செயலாகவே பார்க்கப்படுகிறது.” என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க