`கலைஞர் மீது எனக்குள்ள மரியாதையை ஆதாரப்படுத்த அவசியமில்லை’ - கமல் | kamal hassan not participate in karunanidhi statue opening ceremony

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (16/12/2018)

கடைசி தொடர்பு:14:00 (16/12/2018)

`கலைஞர் மீது எனக்குள்ள மரியாதையை ஆதாரப்படுத்த அவசியமில்லை’ - கமல்

எந்த அரசாக இருந்தாலும் மக்களை மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

கமல்

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று காலை சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசும் போது, “கட்சி பணிகள் மற்றும் கஜா புயலினால் சேதமடைந்த பகுதிகளில் பார்வையிடாத பகுதிகளைப் பார்வையிட நான் இன்று செல்கிறேன். இதற்காக நிறையப் பேர் எனக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பணி இருப்பதால் நான் கலைஞர் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை. மேலும் கலைஞர் மீது எனக்குள்ள மரியாதையை மீண்டும் ஆதாரப் படுத்த வேண்டிய அவசியமில்லை. 

நாடாளுமன்ற தேர்தல் ஆயத்த பணிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. அது சம்பந்தமாகவே தற்போது நான் செல்கிறேன். கூட்டணி தொடர்பாக இப்போது சொல்ல முடியாது அதுவும் ஊடகங்கள் முன் தெரிவிக்க இயலாது. எங்களுக்கு எது நியாயம் என படுகிறதோ, எது மக்களுக்குத் தேவை படுகிறதோ அதைத்தான் செய்வோம். பல பேர் விருப்பத்திற்கு இணங்கச் செய்ய வேண்டிய அவசியமில்லை.

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது என்பது மீண்டும் சுற்றி சுற்றி வந்துகொண்டிருக்கிறது. அதில் எங்களுக்கு ஒப்புதல் இல்லை. எந்த அரசாக இருந்தாலும் மக்களை மதிக்க தெரிந்திருக்க வேண்டும். அதைச் சரியாக செய்தாலே அனைத்தும் சரியாகிவிடும். தற்போதுள்ள அரசு உச்சநீதிமன்றத்தில் போராடி வருகிறது. மக்களைக் காக்க சில நடவடிக்கைகள் எடுக்கும் போது அழுத்தமான சில முடிவுகள் வேண்டும்” எனத் தெரிவித்தார்.