`என்.எல்.சிக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு!' - கறுப்புக் கொடியேற்றி மக்கள் போராட்டம். | Viridhachalam village people opposes land allotment of NLC

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (16/12/2018)

கடைசி தொடர்பு:20:33 (16/12/2018)

`என்.எல்.சிக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு!' - கறுப்புக் கொடியேற்றி மக்கள் போராட்டம்.

கறுப்புக் கொடி போராட்டம்

நெய்வேலி என்எல்சி நிறுவனம் 11.50  மில்லியன் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்க நெய்வேலி அருகே மூன்றாவது  திறந்த வெளி சுரங்கம் அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக நெய்வேலி அருகே உள்ள எரும்பூர், அகரஆலம்பாடி, வீரமுடையாநத்தம், கொளப்பாக்கம், விளக்கப்பாடி, கம்மாபுரம் உட்பட 26 கிராமங்களில் 4841.99 ஹெக்டேர் நிலத்தை ரூ.2130 கோடி மதிப்பில் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. என்.எல்.சி நிறுவனத்தின் இந்த முடிவு, மேற்கண்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகளிடம் கடும் புயலைக் கிளப்பியுள்ளது.  பொதுமக்களின் இந்த கடும் எதிர்ப்பு காரணம், என்.எல்.சி நிறுவனம் கடந்த காலங்களில் நடந்துகொண்ட விதம்தான் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு நிலம் கையகப்படுத்தப்பட்டபோது நிர்வாகம் கூறியதுபோல் உரிய இழப்பீடு, வேலை வாய்ப்பு, மாற்று இடம், மாற்று மனை என எதனையும் முறையாக வழங்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மக்கள் எதிர்ப்பு

``ஆண்டாண்டு காலமாக தங்கள் மூதாதையர்கள் முதல் வாழ்ந்து வளர்ந்த நிலத்தையும், வீட்டையும் மண்ணையும் என்.எல்.சிக்கு வழங்கிவிட்டு  உரிய இழப்பீடு, வேலை வாய்ப்பு என ஏதும் இல்லாமல் வேறு ஊரில் அகதிகள் போல் வறுமையில் வாழ வேண்டிய நிலை உள்ளது. எனவே இதுவரை ஏமாந்தது போதும், இனியும் ஆசை வார்த்தைகளை நம்பி நாங்கள் ஏமாறத் தயாராக இல்லை. அதனால் என்.எல்.சி நிறுவனத்திற்கு எங்கள் நிலத்தில் ஒரு பிடி மண்ணைக் கூட தரமாட்டோம்’’ எனக் கூறி பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தக் கிராமம், கிராமமாகக் கூட்டம் நடத்தி பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். 

இதன் முதற்கட்டமாக நிலம் கையகப்படுத்த உள்ள குமாரமங்கலம், கோபாலபுரம், பெருவரப்பூர், தர்மநல்லூர் உட்பட  10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்று கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். மேலும், கிராமத்தின் பல இடங்களில் "கோ பேக் என்.எல்.சி" எனவும் தங்கள் "நிலத்தில் ஒரு பிடி மண்ணைக் கூட தரமாட்டோம்" எனக் கூறி பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர். மேலும் அனைவரும் ஒன்று கூடி அடுத்தக்கட்ட போராட்டத்தை ஒருங்கிணைக்கவும் முடிவு செய்துள்ளனர்.