வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (16/12/2018)

கடைசி தொடர்பு:19:30 (16/12/2018)

`ஸ்டெர்லைட் பிரச்னை தொடங்கிய இடத்துக்கே வந்திருக்கிறது!’ - கமல்

ஸ்டெர்லைட் பிரச்னை தொடங்கிய இடத்துக்கே வந்திருப்பதாக மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். 

கமல்ஹாசன்

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆலை நிர்வாகம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ததுடன் நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி அளித்துள்ளது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அரசின் மெத்தனப்போக்கே ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாகத் தீர்ப்பு வரக் காரணம் என பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. 

இந்தநிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதில் தங்களுக்கு உடன்பாடில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த கமல், செய்தியாளர்களிடம் பேசினார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீதான மரியாதை எப்போதும் உண்டு என்று கூறிய கமல், கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடச் செல்வதால், கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கவில்லை என்றார். 

ஸ்டெர்லைட் ஆலை

மக்களின் உணர்வுகள் மதிக்கப்படாததால் ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை தொடங்கிய இடத்துக்கே மீண்டும் வந்திருப்பதாகக் கூறிய கமல், ``ஆலையைத் திறப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை. அரசு, உச்ச நீதிமன்றமெல்லாம் சென்று நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இதுபோன்ற மிருதுவான நடவடிக்கைகள் போதாது. மக்களைக் காக்கவேண்டும் என்று வரும்போது அழுத்தமான முடிவுகளை எடுக்க வேண்டும்’’ என்றார்.