`வைகோ போலித்தனமாக பிரசாரம் செய்யக்கூடியவர்!’- பா.ஜ.க., மாநிலச் செயலாளர் கரு.நாகராஜன் | BJP State Secretary K.Nagarajan slams MDMK Supremo Vaiko

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (16/12/2018)

கடைசி தொடர்பு:22:00 (16/12/2018)

`வைகோ போலித்தனமாக பிரசாரம் செய்யக்கூடியவர்!’- பா.ஜ.க., மாநிலச் செயலாளர் கரு.நாகராஜன்

”வைகோ போலித்தனமாக பிரசாரம் செய்யக்கூடியவர். மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் விஜயகாந்தை முதல்வராக்குவேன் எனக்கூறியது போல, ஸ்டாலினையும் முதல்வராக்குவேன் என சபதம் எடுத்துள்ளார்” என  பா.ஜ.க., மாநிலச் செயலாளர்  கரு,நாகரஜன் விமர்சனம் செய்திருக்கிறார்.

கரு,நாகராஜன்

பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனைக் கூட்டம் துாத்துக்குடியில் நடந்தது. இதில் பா.ஜ.க., மாநிலச்  செயலாளர் கரு.நாகராஜன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய அவர், ”பாரதிய ஜனதா கட்சி அனைத்து தேர்தல்களையும் சந்திக்கத் தயாராக இருக்கிறது. அதற்கான ஆலோசனை கூட்டங்களும் நடந்து வருகின்றன. கூட்டணியைப் பொறுத்த வரையில்,  தேர்தல் நேரத்தில் உள்ள சூழ்நிலையை பொறுத்துதான் கூற முடியம். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர,  அ.தி.மு.க,  தி.மு.க உள்ளிட்ட கட்சிகள்  எங்களுடன்  கூட்டணி வைத்து பதவியை அனுபவித்தவர்கள்தான்.

வைகோ, போலித்தனமான பொய் பிரசாரம் செய்ய கூடியவர். தி.மு.க கூட்டணியில் தொடர்வதற்கும், அவர்களிடம் ஒரு சீட் வாங்குவதற்கும் பா.ஜ.கவையும் மோடியையும் கடுமையாகச் சாடுகிறார். ”மக்கள் நலக் கூட்டணி” என ஒன்றை உருவாக்கி விஜயகாந்தை முதல்வராக்குவேன் எனக் கூறியதைப் போல, தற்போது ஸ்டாலினை முதல்வராக்குவேன் என்கிறார் அவர். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து முதலில்  போராடி கைதானது பாரதிய ஜனதாக் கட்சியின், தற்போதைய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்தான்.  திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்தான் ஸ்டெர்லைட் ஆலை இங்கு திறக்கப்பட்டு, விரிவாக்கத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது. 

வைகோ

தற்போது அவர்களே ஆலைக்கு எதிராக போராடுவது வேடிக்கையாக உள்ளது.  ஆலையில் முறையாக விதிகள் பராமரிக்கப்படுகிறதா என, கண்காணித்து அறிக்கை  தரவேண்டியது தமிழக அரசுதான்.  ஸ்டெர்லைட் ஆலையை கண்காணித்து அறிக்கையை முறையாக கையாண்டிருந்தால் அங்கே தவறு நடந்திருக்காது.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் நீதிமன்றங்கள் என்ன சொல்கிறதோ, அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். ஆலையை கண்காணிக்கின்ற விசயத்தில்,  தடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், மக்கள் நலனுக்காக ஆலையை மூடுவதில் தவறில்லை. தோ்தலில் வெற்றிக்காக கூட்டணி வைப்பதை,  பிரதமர் மோடி விரும்பவில்லை. மக்கள் நலனுக்கான கூட்டணியைத்தான் அவர் விரும்புகிறார். அதைத்தான் பா.ஜ.க என்றும் விரும்புகிறது” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க