`ராகுல் காந்தியே வருக...நாட்டுக்கு நல்லாட்சி தருக!’ - சென்னை பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு | Rahul gandhi should be our PM, says DMK president Stalin

வெளியிடப்பட்ட நேரம்: 19:59 (16/12/2018)

கடைசி தொடர்பு:20:03 (16/12/2018)

`ராகுல் காந்தியே வருக...நாட்டுக்கு நல்லாட்சி தருக!’ - சென்னை பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயரை முன்மொழிவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறினார். 

ஸ்டாலின், சோனியா, ராகுல் காந்தி

கருணாநிதி சிலை திறப்பு விழா சிறப்புப் பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், பிரதமர் மோடியையும், பா.ஜ.கவின் ஆட்சியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். ``மோடி ஆட்சி செய்த இந்த 5 ஆண்டுகளில் நாடு 15 ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது. இன்னும் 5 ஆண்டுகள் அவரை ஆட்சி செய்தால், நான் அடித்துச் சொல்லுகிறேன், நாடு 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடும். அவரால், நாட்டின் சமூக நல்லிணக்கத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் அவரை வீழ்த்த நினைக்கிறோம். அவரை வீழ்த்துவதற்காக 21 கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைந்திருக்கின்றன. இன்னும் பல கட்சிகள் எங்களுடன் கைகோக்கும். 

விழா மேடையில் ஸ்டாலின், சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள்

மோடி, தன்னை ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக எண்ணாமல், பரம்பரை மன்னர் போல் நினைத்துக் கொண்டிருக்கிறார். பிரதமர் மட்டுமல்லாது, ஜனாதிபதியாகவும்,  உச்ச நீதிமன்றமாகவும், சிபிஐ-ஆகவும், வருமான வரித்துறையாகவும் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார். சாடிஸ்ட் மனநிலையில் அவர் இருக்கிறார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட அவர் வரவில்லை. இதுவே குஜராத்திலோ, மகராஷ்டிராவிலோ இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால், அவர் வராமல் இருந்திருப்பாரா?. தமிழர்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா?’’ என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார். 

ஸ்டாலின்


நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதாகத் தெரிவித்த ஸ்டாலின், ``1980-ல் தலைவர் கருணாநிதி, இந்திராகாந்தி பிரதமராக வேண்டும் என்று குரல் கொடுத்தபோது `நேருவின் மகளே வருக...நிலையான ஆட்சி தருக’ என்று கூறினார். அதேபோல், 2004ம் ஆண்டில் சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற கூட்டத்தில் சோனியா காந்தி குறித்து பேசிய கருணாநிதி, `இந்திராவின் மருமகளே வருக... இந்தியாவின் திருமகளே வெல்க’ என்று முழங்கினார். இன்று, 2018ம் ஆண்டு, அதுவும் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் அவருடைய மகனாக நாட்டின் பிரதமர் வேட்பாளராக தமிழகத்தில் இருந்து ராகுல் காந்தியின் பெயரை நான் முன்மொழிகிறேன்.  ராகுல் காந்தியே வருக... நாட்டுக்கு நல்லாட்சி தருக.. பாசிச, நாசிச மோடி ஆட்சியை வீழ்த்தும் வல்லமை ராகுல் காந்திக்கு இருக்கிறது. ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்துவோம். அனைவரும் ஒன்றுசேர்த்து வலுப்படுத்துவோம். நாட்டைக் காப்பாற்றுவோம் என்று உங்களோடு சேர்ந்து நானும் உறுதிமொழி எடுக்கிறேன்’’ என்று பேசினார்.