வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (16/12/2018)

கடைசி தொடர்பு:22:08 (16/12/2018)

`மகளைக் கண்டிபிடிச்சுக் கொடுங்க!’ - காவல்நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ற தம்பதி

'இளைஞர் ஒருவர் எங்களது மகளை கடத்தி சென்றுவிட்டார்' என்று ஒரு தம்பதி கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்காததால் சம்மந்தப்பட்ட காவல்நிலையம் முன்பு அந்த தம்பதி தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

  காவல்நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்ற தம்பதி          

கரூர் மாவட்டம்,கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது பாலவிடுதி. கரூர் மாவட்டத்தில் உள்ள பெரிய ஊராட்சி இது. பாலவிடுதி காவல்நிலையத்தின் முன்பு, அதே கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி, தனது மனைவி மற்றும் மகனோடு வந்தார். கையில் மண்ணெய் கேனுடன் காவல்நிலையத்துக்கு வந்த அவர்கள் மூவரும், திடீரென மண்ணெண்ணெயைத் தங்கள் மீது ஊற்றி, தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றனர். அதை பார்த்து பதறிய போலீஸாரும், அங்கே இருந்த மக்களும், மூவரையும் தடுத்து நிறுத்தினர். 

 காவல்நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்ற தம்பதி

`இங்கே ஏன் வந்து தற்கொலை பண்ணிக்க பார்க்கிறீங்க. எங்க பொழப்புல மண் அள்ளி போடவா?’’ என்றபடியே மூவரையும் காவல்நிலையத்திற்குள் அழைத்துப் போய் அமர வைத்தனர் போலீஸார். இதைக் கேட்டு ஆவேசமான வெள்ளைச்சாமி,``கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் என் மகளை, இதே பகுதியைச் சேர்ந்த ஜே.சி.பி இயந்திர டிரைவராக இருக்கும் மூர்த்திங்கிற பையன் ஆசை வார்த்தை கூறி கடத்திட்டு போய்ட்டான். அவன்கிட்ட இருந்து என் மகளை மீட்டுக் கொடுங்க'ன்னு உங்க காவல்நிலையத்தில் புகார் கொடுத்தோம். 'நடவடிக்கை எடுக்கிறதா சொன்ன நீங்க, நாள்களை கடத்துறீங்களே ஒழிய,என் மகளை மீட்க எந்த நடவடிக்கையையும் நீங்க எடுக்கிறதா தெரியலை. அதனால்தான் நடவடிக்கை எடுக்காம ஏமாத்தும் உங்க கண் முன்னாடியே தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துபோய்டலாம்ன்னு முடிவு பண்ணி இங்க வந்தோம். அதையும் தடுத்துட்டீங்க" என்று பேசினார்.

 காவல்நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்ற தம்பதி

ஆனால், பாலவிடுதி காவல்நிலைய போலீஸாரோ,``உங்க மகளை நீங்க சரியாம வளர்க்காம விட்டுட்டு, இப்ப இங்க வந்து தற்கொலை பண்ணிக்கிட்டா சரியாயிடுமா?,மூர்த்தியை வலைவீசி தேடிக்கிட்டுதான் இருக்கோம். எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சதும் மீட்டுத் தர்றோம்" என்று சமாதானம் பண்ணி அனுப்பினர். "எங்க மகளை மீட்டுத் தரலைன்னா, நாங்க தற்கொலை பண்ணிக்கிட்டு சாவுறது உறுதிதான்" என்றபடி அவர்கள் சென்றனர். மகளை மீட்க நடவடிக்கை எடுக்காத போலீஸாரைக் கண்டித்து, காவல்நிலையத்தின் வாசலிலேயே தங்கள் மகனோடு தற்கொலைக்கு முயன்ற தம்பதியால் கடவூர் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.