வெளியிடப்பட்ட நேரம்: 23:15 (16/12/2018)

கடைசி தொடர்பு:23:15 (16/12/2018)

மன்னர் காலத்து `சித்திரா’ நூலக விவகாரம் - மல்லுக்கட்டும் இந்து சமய அறநிலையத்துறை - நாகர்கோவில் நகராட்சி!

நாகர்கோவிலில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இந்து மத நூலகம் சம்பந்தமாக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் நாகர்கோவில் நகராட்சி நிர்வாகத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

சித்திரா நூலகம்

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சியின் கீழ் இருந்த சமயத்தில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே இந்து மத நூலகம் அமைக்கப்பட்டது. சித்திரா நூலகம் என பெயர் சூட்டப்பட்ட இந்த நூலகம் தற்போது இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பழைமையான நூலகம் திறக்கப்படாமல் கிடப்பதாகவும், பல நூல்கள் பாழடைந்து, காணாமல் போயிருப்பதாக வெள்ளிமலை ஆசிரம சுவாமி சைதன்யானந்தஜி தலைமையில் கடந்த 5-மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடந்தது. நூலகத்திற்கு அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்காகக் கட்டப்பட்ட கலையரங்கத்தில் அறநிலையத்துறை ஊழியர் ஒருவரின் ஆசியுடன் வியாபரம் நடப்பதாகவும், புராதனமான கட்டடத்தை வியாபார தலம் ஆக்குவதற்குச் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவில் நகராட்சி சார்பில் இந்த நூலகத்தில் ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

சித்திரா நூலகம்

அந்த நோட்டீசில், "பழைமையான இந்த நூலக கட்டடம் உறுதித்தன்மை இல்லாமல், எந்த நேரமும் இடிந்து விழுந்து பொதுமக்களுக்கும், வாகன ஓடிகளுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் நிலை உள்ளது. எனவே யாருக்கும் ஆபத்து ஏற்படாதவண்ணம் தங்கள் செலவில் இடித்து அகற்ற வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு இந்து சமய அறநிலையத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்த் கூறுகையில், "இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தில் உள்ள சித்திரா நூலகம் புராதனமானது. அந்த கட்டடம் தொல்லியல் துறையின் கீழ் வருவதால் அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டடத்தை இடிக்கச் சொல்லும் அதிகாரம் நகராட்சிக்கு இல்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்துள்ளோம். இதற்கு மேல் பிரச்னை செய்தால் கோர்ட்டுக்கு செல்லுவோம்" என்றார்.

சரவணகுமார்

நாகர்கோவில் நகராட்சி ஆணையாளர் சரவணகுமாரிடம் பேசினோம், "நகராட்சி அதிகாரிகள் கள ஆய்வுக்கு சென்றபோது சித்திரா நூலகத்தினுள் சமூக விரோத செயல்கள் நடைபெற்றது. இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போக்ஸோ சட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடசேரி பேருந்து நிலையத்திற்குச் செல்வதற்கான அணுகுசாலை சுமார் 30 அடி அகலத்தில் உள்ளது. அந்த சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். நூலகம் புராதன கட்டடம் எனக் கூறுபவர்கள் கட்டடத்தின் ஒரு பகுதியை சேதப்படுத்தி தற்காலிக கடை அமைத்து தினசரி வாடகைக்கு விட்டுள்ளனர். இதற்காக நகராட்சியிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. திருமண மண்டபங்களில் தற்காலிக விற்பனை மேளா நடத்தினாலும் நகராட்சிக்கு வரி செலுத்த வேண்டும். ஆனால், நகராட்சிக்கு வரி செலுத்தாமல் வியாபார மையம் நடத்தி வருகிறார்கள். சட்ட விரோத செயல்கள் நடந்ததால் நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920-ல் உள்ள சரத்தின்படியே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  நகராட்சி எல்லைக்குட்பட்ட எந்த ஒரு பகுதிக்கும் ஆய்வுக்குச் செல்ல நகராட்சி அதிகாரிகளுக்கு சட்டப்பூர்வமான உரிமை உண்டு" எனத் தெரிவித்தார்.

சித்திரா நூலகம்

நாகர்கோவில் நகராட்சி அளித்த நோட்டீஸை நேர்மறையாகக் கொண்டு முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வராத நூலகத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க வேண்டும். வணிக வளாகத்தை அகற்றிவிட்டு, வாசகர்களுக்கு நூலகம் முழுமையாகப் பயன்படும் விதத்தில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். சமூக விரோத செயல்கள் நடப்பதைத் தடுக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாக உள்ளது.