வெளியிடப்பட்ட நேரம்: 01:55 (17/12/2018)

கடைசி தொடர்பு:09:57 (17/12/2018)

“தேனியில் மூங்கில் மரங்கள் வெட்டிக் கடத்தல்!' − அதிகாரிகள் துணைபோவதாகப் பொதுமக்கள் ஆதங்கம்

தேனியில், வருவாய்த்துறைக்குச் சொந்தமான இடங்களில் உள்ள பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த மூங்கில் மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுவருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மூங்கில்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணைக்கு மேல் உள்ள கரைப்பகுதியில், அதிக அளவில் மூங்கில் மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால், இங்குள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு,  மூங்கில் அணை காமாட்சி அம்மன் கோயில் எனப் பெயர் உள்ளது. கடந்த சில மாதங்களாக, இப்பகுதியில் உள்ள மூங்கில் மரங்களை மர்மக் கும்பல் ஒன்று வெட்டிக்  கடத்திவருவதாக அப்பகுதி விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இதுவரை 3 முதல் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான மூங்கில் மரங்கள்  வெட்டப்பட்டுள்ளதாகவும், வெட்டப்படும் மூங்கில் மரங்கள், பெரியகுளம் பகுதியில் உள்ள ஒரு தனியார்  நிறுவனத்துக்குக் கொண்டுசெல்லப்படுவதாகவும், மாவட்ட வருவாய்த் துறைக்குச் சொந்தமான இடத்தில் இருக்கும் இந்த மூங்கில் மரங்கள், எந்த அனுமதியும் இன்றி இரவோடு இரவாக வெட்டிக் கடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் அப்பகுதியில், விலை உயர்ந்த தேக்கு, தோதகத்தி, சந்தனம் உள்ளிட்ட மரங்கள் இருப்பதால், அந்த மர்மக்கும்பல் அவற்றையும் வெட்டிக் கடத்தியுள்ளதா என ஆய்வுசெய்ய வேண்டும் என்றனர்.

இந்த கடத்தல் சம்பவம்குறித்து நம்மிடம் பேசிய மஞ்சளாறு பகுதி விவசாயி அரசப்பன், "மூங்கில் மரங்கள் கடத்தல் தொடர்பாக சம்பந்தப்பட்ட வருவாய்துறை அதிகாரிகளுக்குத் தகவல்கொடுத்தும்,இதுவரை எந்தப் பலனும் இல்லை.அதிகாரிகள் இந்த கடத்தல் கும்பலுக்குத் துணைபோகிறார்களா என்ற சந்தேகமும் எங்களுக்கு உண்டு என்றார்.

சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அலுவலரைத் தொடர்புகொண்டு பேசியபோது, அவர், இது சம்பந்தமாக பதில் அளிக்க மறுத்துவிட்டார்.  பசுமை மாறா மஞ்சளாறு அணைப்பகுதியில் சட்டவிரோதமாக மரம் கடத்தும் அந்த மர்மகும்பல்மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.