‘டெல்டா விவசாயிகளுக்காக அமெரிக்காவில் மொய் விருந்து’- 8000 டாலர்கள் திரட்டிய அமெரிக்கத் தமிழர்கள் | USA tamil people Gave 8000 dollars to Delta Farmers

வெளியிடப்பட்ட நேரம்: 04:55 (17/12/2018)

கடைசி தொடர்பு:08:39 (17/12/2018)

‘டெல்டா விவசாயிகளுக்காக அமெரிக்காவில் மொய் விருந்து’- 8000 டாலர்கள் திரட்டிய அமெரிக்கத் தமிழர்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளின் விவசாய நிலங்களில் வீழ்ந்து கிடக்கும் மரங்களை அகற்றி, அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் வகையில், அமெரிக்காவில் வசித்துவரும் தமிழர்கள் இணைந்து 8,000 அமெரிக்க டாலர் நிதி உதவி அளித்             துள்ளனர்.

தமிழகத்தில், கடந்த 16-ம் தேதி வீசிய கஜா புயலின் கோரத்தாண்டவத்தால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. விவசாயிகளின் தென்னை, மா,பலா,வாழைப் பயிர்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. ஆண்டாண்டு காலமாகத் தங்களுக்கு சோறுபோட்டு வந்த விவசாயப் பயிர்களை இழந்து, வாழ்வாதாரம் இழந்து,  செய்வதறியாது தவித்து வரும் நிலையில்தான், தன்னார்வல அமைப்புகள் பல, விவசாயிகளுக்குத் தன்னம்பிக்கை கொடுக்கும் வகையில் களத்தில் இறங்கி தங்களால் முடிந்த உதவிகளைச் செய்துவருகின்றன. மேலும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், வெளிநாடு வாழ் தமிழகர்கள் தன்னார்வ அமைப்புகளுடன் கரம்கோத்து, புனரமைப்புப் பணிகளைச் செய்துவருகின்றனர்.

கஜா புயல்

இதன் ஒரு பகுதியாக, கடந்த வாரம் அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில், 'வாகை மகளிர் மேம்பாட்டுக்குழு' என்ற தமிழ்ப் பெண்கள் அமைப்பு மொய்விருந்து நடத்தி, 5000 அமெரிக்க டாலர்களை சூரிய ஒளி மின்சாரத்தில் தெருவிளக்குகளை அமைக்க நன்கொடையாக வழங்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில், அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, டால்ஸில் வாழும் அமெர்க்கத் தமிழர்கள் ஆதரவுடன் 'தமிழ் மலரும் மையம்' என்னும் தமிழ்ப் பள்ளியின் முன்னெடுப்பில் பல்வேறு அமைப்புகள் இணைந்து, மொய்விருந்து நடத்தி, அதை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்துள்ளனர்.

முன்னதாகவே, டாலஸில் வசிக்கும் தமிழர்கள் இணைந்து முதல்கட்டமாக 8000 அமெரிக்க டாலர்களை கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளின் விளைநிலங்களில் வீழ்ந்துகிடக்கும் மரங்களை அகற்றி, அவர்களுக்கு தென்னை, பலா, எலுமிச்சங் கன்றுகளை வழங்க முன்வந்து, அத்தொகையை தமிழ்நாடு ஃபவுண்டேஷன் தாலஸ் மூலம், கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பின் மூலம் வழங்கி உள்ளனர். டாலஸ் நகர தமிழ் மக்களின் பங்களிப்பில் இந்நிதியினை விவசாயிகளுக்கு அளித்திட அருண்குமார், நம்பி,முனிராஜ்,தாரகராம்,சக்திகுமார்,சிவக்குமார் ஆகியோர் பெரும்பங்காற்றியுள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய அமெரிக்க வாழ் தமிழரான அருண்குமார், "கஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் தமிழ் மக்களோடு எங்களால் நேரடியாக களத்தில் நிற்க முடியாவிட்டாலும், விவசாயிகளின் நம்பிக்கையை வளர்த்தெடுக்க, எங்கள் சார்பில் 'மரங்கள்' அவர்களோடு நிற்கும் என்பதில் நாங்கள் திருப்தி அடைகிறோம். இதில், பொறியாளரும் சமூக ஆர்வலருமான பிரவீணா வரதராஜன் அவர்களின் பங்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள முத்தன்பள்ளம் என்னும் கிராமத்தைச் சீரமைக்கவும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புனரமைப்புப் பணிகளுக்காக நிதி அளிக்கும் நோக்கில், 'மொய்விருந்து விழா' தமிழ்மலரும் மையம் என்னும் தமிழ்வழிப் பள்ளியில் நடைபெற்றது. மொய் விருந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜெய்நடேசன், கீதாசுரேஷ் ஆகியோர் ஏற்பாடுசெய்தனர். ஒருங்கிணைந்த தமிழ் அமைப்பும் இணைந்து முன்னெடுத்தது.