சிபிஐ விசாரணையில் இறுகும் பிடி - முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு | gutkha scam cbi enquires health-minister vijayabaskar

வெளியிடப்பட்ட நேரம்: 11:16 (17/12/2018)

கடைசி தொடர்பு:11:16 (17/12/2018)

சிபிஐ விசாரணையில் இறுகும் பிடி - முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு

குட்கா முறைகேடு வழக்கில், மூன்றாவது நாளாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர். 

விஜயபாஸ்கர்

சென்னை செங்குன்றத்தில் உள்ள மாதவராவ் என்பவருக்குச் சொந்தமான குட்கா குடோன் மற்றும் அவரது வீட்டில், கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதில், தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் கைப்பற்றப்பட்டன. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், இவ்வழக்கு, சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, இந்த வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழிக டிஜிபி டி.கே ராஜேந்திரன் உள்ளிட்டோர் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது. இந்த விவகாரம் பெரிதாகப் பேசப்பட்ட நிலையில், கடந்த மாதம் குட்கா வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது. இதில், மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. 

விஜயபாஸ்கர்

இந்நிலையில், கடந்த வாரம் குட்கா முறைகேடு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் ஆகியோருடன், முன்னாள் அமைச்சர் ரமணா உள்ளிட்டோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதுவரை குட்கா முறைகேடு வழக்கில் அதிகம் பேசப்படாதவர் முன்னாள் அமைச்சர் ரமணா. சிபிஐ ரெய்டுக்குப் பிறகு அவரிடம் அதிகம் விசாரணை நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில், அவருக்குத் திடீர் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது, அரசியல் வட்டாரத்திலும் இந்த வழக்கிலும் புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. சம்மனைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று விஜயபாஸ்கர், ரமணா, சரவணன் ஆகியோர் ஆஜராகினர். 

நேற்றும், அவர்கள் மூவரிடத்திலும் விசாரணை நடத்தப்பட்டது. காலையில் ஆஜரான இவர்களிடம் மாலை நேரத்தையும் கடந்து சுமார் 9 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு ஆவணங்களைக் காட்டி விசாரணை நடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, இன்றும் விசாரணை நடைபெறவுள்ளது. குட்கா வழக்கில் பிடி இறுகுவதால், விஜயபாஸ்கருக்குக் கூடுதல் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராவதற்கு முன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துள்ளார் விஜயபாஸ்கர். அவரிடம் ஆலோசனையில் ஈடுபட்டுவருவதாகத் தெரிகிறது. இரண்டு நாள் விசாரணைக்கு மத்தியில் இந்தச் சந்திப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க