`இன்றுடன் 100 நாள் முடிந்தது!' - பேரறிவாளன் விடுதலைக்காகக் கலங்கும் அற்புதம்மாள் | arputham ammal tweets about perarivalan release

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (17/12/2018)

கடைசி தொடர்பு:11:41 (17/12/2018)

`இன்றுடன் 100 நாள் முடிந்தது!' - பேரறிவாளன் விடுதலைக்காகக் கலங்கும் அற்புதம்மாள்

 'ஏழு பேரின் விடுதலைக்கு ஆளுநர் முடிவெடுக்கலாம்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இன்றுடன் 100 நாள்கள் முடிந்துள்ளன.

பேரறிவாளன்

`முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரின் விடுதலைகுறித்து தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம்' என்று உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்ததையடுத்து, செப்டம்பர் 9-ம் தேதி அன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடியது. கூட்டத்தின் முடிவில், சிறை அதிகாரிகளின் பரிந்துரைகள், வழக்கில் இத்தனை காலமாக நிகழ்ந்தவை உள்ளிட்டவை அடங்கிய கோப்புகள், அமைச்சரவையின் தீர்மானம், சட்டவிதி 161-ன் படியான கருணை மனு ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, தமிழக ஆளுநரின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நிலையில், 7 பேர் விடுதலை தொடர்பாக, உறுதியான முடிவுகள் ஏதும் எடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டேவருகிறது. 

அற்புதம்மாள்

7 பேரையும் விடுவிக்க வேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் உட்பட, பலரும் குரல்கொடுத்துவருகின்றனர். அந்த வகையில், பேரறிவாளன் விடுதலைக்காக அவரின் தாயார் அற்புதம்மாள் தொடர்ந்து போராடிவருகிறார். முதல்வர், ஆளுநரைச் சந்திப்பது, போராட்டங்களை முன்னெடுப்பது என விடுதலைக்காகப் போராடிவருகிறார். போராட்டத்தின் ஒரு பகுதியாக, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார். பேரறிவாளன் விடுதலைக்கு வலு சேர்க்கும் வகையில் ட்விட்டரில் தொடர்ந்து குரல்கொடுக்க உள்ளார். 

பேரறிவாளன் - அற்புதம்மாள்

அந்த வகையில், பேரறிவாளனுக்கு விடுதலைக்காக ட்வீட் செய்துள்ளார். பேரறிவாளவன் பரோலில் வந்தபோது எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டு, ``இன்றுடன் 100 நாள் முடிந்தது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது... அமைச்சரவை பரிந்துரைத்தது... ஆளுநர் மௌனம் ஏன்?  நிரபராதியின் தாய் மனத்தை மக்கள் புரிந்துகொண்டார்கள்.

அற்புதம்மாள்

ஆளுநர் மாளிகைக்குப் புரிவதெப்போ... நீதி வெல்வதெப்போ? விடுப்பில் வந்தான், 'மகிழ்ந்தோம்'. விடைபெற்றுச் சென்றான், 'உடைந்தோம்' வழியும் கண்ணீர் விழிகளோடு காத்திருக்கிறோம், அவன் விடுதலைக்கு' என்று குறிப்பிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க