`பாசனக் கால்வாயில் கலக்கும் கழிவுநீர்!’ - அரைகுறை பாதாளச்சாக்கடை திட்டத்தால் மக்கள் அவதி | people agitate for sewage water sent to irrigation channel by nellai corporation

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (17/12/2018)

கடைசி தொடர்பு:13:45 (17/12/2018)

`பாசனக் கால்வாயில் கலக்கும் கழிவுநீர்!’ - அரைகுறை பாதாளச்சாக்கடை திட்டத்தால் மக்கள் அவதி

நெல்லை மாநகராட்சியின் பாதாளச்சாக்கடை திட்டத்தின்மூலம் சேகரிக்கப்படும் கழிவு நீர், சுத்திகரிக்கப்படாமல் ராமையன்பட்டி பகுதியில் பாசனக் கால்வாயில் கலக்கிறது. அதனால், துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாநகராட்சியின் பாதாளச்சாக்கடை திட்டத்தின்மூலம் சேகரிக்கப்படும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல், ராமையன்பட்டி பகுதியில் பாசனக் கால்வாயில் கலக்கிறது. அதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்கள் கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

பாதாளச் சாக்கடை - எதிர்ப்பு

நெல்லை மாநகராட்சி, 55 வார்டுகளைக்கொண்டது. மாநகர எல்லைக்கு உட்பட்ட விரிவாக்கப் பகுதி நீங்கலாக, நெல்லை டவுன், பாளையங்கோட்டை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் பாதாளச்சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சேகரிக்கப்படும் கழிவு நீர், சங்கரன்கோவில் சாலைக்கு அருகில் உள்ள ராமையன்பட்டி சுத்திகரிப்பு மையத்தில் தேக்கப்படுகிறது.

அங்குள்ள சுத்திகரிப்பு மையத்தில் கழிவுநீரைச் சுத்திகரித்த பின், அங்கிருந்து வெளியேற்றப்படுகிறது. ஆனால், மாநகராட்சி நிர்வாகம் தற்போது கழிவு நீரைச் சுத்திகரிக்காமல், அதன் அருகில் உள்ள விவசாய பாசனக் கால்வாயில் திறந்துவிடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், பாசனத்துக்குச் செல்லும் நெல்லைக் கால்வாயில் செல்லும்  கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி, துர்நாற்றத்தைப் பரப்புகிறது. 

நெல்லைக் கால்வாய் அருகில் குடியிருப்புகளும் வணிக நிறுவனங்களும் உள்ளதால், பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. வீடுகளில் மக்கள் வசிக்கவே இயலாத அளவுக்கு அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளதால், தொற்றுநோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கடந்த 14-ம் தேதி ஊராட்சிமன்ற அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டம்

அதன் பின்னரும் மாநகராட்சி நிர்வாகத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், இன்று கடையடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். அதன்படி, ராமையன்பட்டி பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, பாசனக் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை உடனடியாகத் தடுத்துநிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோஷங்களை எழுப்பிவருகின்றனர்.