ஸ்டெர்லைட் கலவரம் தொடங்கியது யார்? முகிலன் வெளியிட்ட ஆதாரம்! | sterlite struggle : Mukilan releases new evidence

வெளியிடப்பட்ட நேரம்: 18:09 (17/12/2018)

கடைசி தொடர்பு:18:33 (17/12/2018)

ஸ்டெர்லைட் கலவரம் தொடங்கியது யார்? முகிலன் வெளியிட்ட ஆதாரம்!

போராடிய மக்கள்மீது எவ்வித அறிவிப்பும் இன்றி துப்பாக்கிச் சூடு நடத்திய பின்புதான் தீவைப்புச் சம்பவம் காவல் துறை பாதுகாப்போடு நடந்துள்ளது என்பதை ஆதாரபூர்வமாகச் சொல்கிறோம்.

ஸ்டெர்லைட் கலவரம் தொடங்கியது யார்? முகிலன் வெளியிட்ட ஆதாரம்!

ஸ்டெர்லைட் ஆலை இயங்கத் தடை இல்லை என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ``ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டின்போது  நடந்தது இதுதான்" என்று, சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுபற்றி நம்மிடம் பேசிய முகிலன், ``தமிழக அரசின் அரசாணை மூலம் தடைசெய்யப்பட்டுள்ள ஸ்டொ்லைட் நிறுவனம் எக்காலத்திலும் இயங்குவதற்கு தகுதியற்றது என்பதற்கு மிக முக்கிய ஆவணங்களை வெளியிட்டுள்ளோம். ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நிகழ்த்தப்பட்ட  துப்பாக்கிச் சூடு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகும். அதைப்பற்றி மக்கள் அறிந்திராத உண்மைகள் இது.

ஸ்டெர்லைட் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள், மே 22-ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் வந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்குத் தீவைத்தனர். போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதனால், 14 பேர் இறந்தனர் என்பதுதான் அரசுத் தரப்பில் கூறப்பட்டு வரும் செய்தியாகும். அரசு கூறியதை வைத்துதான் பலரும் மக்கள் செய்தது தவறு, வேறு வழியின்றி போலீஸ் மக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது எனவும், எல்லோரும் கூறி வருகிறார்கள். ஆனால் மே 22-ம் தேதி நடந்த உண்மை வேறானது.

போராடிய மக்கள்மீது எவ்வித அறிவிப்பும் இன்றி துப்பாக்கிச் சூடு நடத்திய பின்புதான் தீவைப்புச் சம்பவம் காவல் துறை பாதுகாப்போடு நடந்துள்ளது என்பதை ஆதாரபூர்வமாகச் சொல்கிறோம். பேரணியாக வந்த மக்கள் காலை 11.50 மணிக்குத்தான் தூத்துக்குடி- நெல்லை நான்கு வழிச் சாலையிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைகின்றனர். காலை 11.55 மணிக்கு ஆட்சியர் அலுவலகம் முன்பு சேருகின்றனர். மக்கள்மீது எவ்வித அறிவிப்பும் கொடுக்காமல் சரியாக காலை 11.56 மணிக்கு காவல் துறையினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. அதனால் அச்சமடைந்த மக்கள், மாவட்ட ஆட்சியர்  அலுவலக வளாகத்தின் கிழக்குப்புறச் சாலை வழியாக ஓடி,  நான்கு  வழி நெடுஞ்சாலையை அடைந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு நின்றனர். அப்போது நேரம் பகல் 11.59. ஆனால், மக்கள் கூட்டத்தில் இருந்த சிலர் மட்டும் தென்புறமாகச் செல்லாமல் வடக்குப்புறமாக ஓடி  மாற்றுத்திறனாளிகள் படிப்பகம் அருகே நின்றனர். மக்கள் நான்கு வழிச் சாலையில் காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டுக்கொண்டிருக்கும்போதே மதியம் 12.01 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக மேற்குப் புறத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த போலீஸ் கன்ட்ரோல் ரூமிலிருந்து நெல்லை  டி.ஐ.ஜி.,  காரில் டெம்போ டிராவலர் வாகனப் பாதுகாப்போடு வெளியேறுகிறார்.

இந்த நேரத்தில் போராட்டத்தில் பங்கேற்ற கந்தையா, ஆட்சியர்  அலுவலக வளாகத்தின் முன்புறப் பகுதியில் கிழக்குப்புறத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கும் நிலையில் உள்ளார், அவரை ஊடகங்கள் படமெடுக்கின்றன. அப்போது காவல் துறை போட்டோகிராபரும் அவர் அருகே இளஞ்சிவப்பு நிற ஸ்கூட்டியை நிறுத்திவைத்துவிட்டு படம் எடுக்கிறார். கந்தையா அருகே சந்தோஷ் என்ற இளைஞரும் காவல் துறை தாக்குதலால் கடுமையாகக் காயமுற்று அமர்ந்திருக்கிறார். அவர் செய்தியாளர்களிடம், 'தான் இறந்தால் காவல் துறையே முழுப் பொறுப்பு' எனக் கூறுகிறார். இது நிகழும்போது அங்கிருந்த எந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்படவில்லை என்பது காட்சி  ஊடகம் பதிவுகள்மூலம் நாம் அறிய முடிகிறது.

முகிலன்

பகல் 12.02-க்கு போலீஸ் போட்டோகிராபர் தனது இளஞ்சிவப்பு ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்து தெற்கே சென்று மேற்குப் புறமாகச் செல்லும்போதும், அங்கும் தீவைப்பு நிகழ்வுகள் நடைபெற்று இருக்கவில்லை. பகல் 12.04 மணிக்கு மாவட்ட ஆட்சியர்  அலுவலகத் தெற்குப் பகுதியில் வெள்ளைச் சட்டை- கறுப்பு பேன்ட் அணிந்த அரசு அதிகாரிகள் யாருக்காகவோ காத்துக்கொண்டிருந்தனர். ஒருவர் மட்டும் கிழக்குப்புறச் சாலையைப் பார்த்துவிட்டு  வேகமாக ஓடிவருகிறார். இதையடுத்து உடனே  அங்கிருந்த சீருடை அணிந்த, அணியாத காவல் துறையினர் சிலர், ஆட்சியர் அலுவலக முன்புறத்தில் மேற்காக உள்ள போலீஸ் கன்டரோல் ரூமுக்கும், மற்றவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டடத்துக்குள்ளும் ஓடிவந்துவிடுகின்றனர்.

சரியாக 12.05 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கிழக்குப் புறத்திலிருந்து சுமார் 40 பேர் சைக்கிள் ஸ்டாண்டுக்குத் தீவைத்துவிட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களைத் தரையில் தள்ளித் தீவைக்கின்றனர். இதை, காவல் துறையினர் யாரும் தடுத்து விரட்டவும் இல்லை, துப்பாக்கியால் சுடவும் இல்லை, கண்ணீர் புகைக்குண்டு எறிந்து கலைக்கவும் இல்லை. அதேபோல், தீவைப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட யாரும் நான்கு வழிச் சாலையிலிருந்து வரவில்லை. இந்தத் துப்பாக்கிச்சூடும், தீவைப்புச் சம்பவமும் திட்டமிட்டு ஸ்டெர்லைட் நிர்வாகமும், அரசும் சேர்ந்து நடத்திய படுகொலையாகும்.

சுற்றுச்சூழல் சட்டங்களையும், விதிகளையும் மதிக்காத ஸ்டெர்லைட் நிறுவனம், தனது அடியாட்கள் மூலம் தீவைப்பு சம்பவத்தை நடத்தி குற்ற நிறுவனமாக மாறியுள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனம் இந்தியாவிலும், உலகத்திலும் எங்கும் இயங்கத் தகுதியில்லாத, சட்டவிரோத நிறுவனமாக மாறியுள்ளது. உடனடியாக இந்தப் படுகொலைக்குக் காரணமாக உள்ள வேதாந்தா உரிமையாளர் அனில் அகர்வாலை கைது செய்ய வேண்டும். இந்த நிறுவனத்தைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும். நடைபெற இருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஸ்டெர்லைட்  மற்றும் வேதாந்தாவின் அனைத்து நிறுவனங்களுக்கும் கொடுத்துள்ள அனுமதியை ரத்து செய்ய அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். உலக அளவில் வேதாந்தா குழுமத்தை தடைசெய்வதோடு அதன் குற்றப் பின்னணி நடவடிக்கைக்காகச் சர்வதேச சட்டப்படி தகுந்த தண்டணை கொடுக்க வேண்டும். இப்பிரச்னையை ஐ.நா.சபைவரை கொண்டுசெல்வோம்" என்றார். 

முகிலன் வெளியிட்டுள்ள வீடியோ ஆதாரம் புதிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்