விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை தேவை! - நாட்டுப் படகு மீனவர்கள் காத்திருப்பு போராட்டம் | Small industry fishermen holds protest for the fisheries regulatory law implementation

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (17/12/2018)

கடைசி தொடர்பு:16:05 (17/12/2018)

விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை தேவை! - நாட்டுப் படகு மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்

 தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்துக்குப் புறம்பாக கரையோர மீன்பிடிப்பில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடல் தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்துக்குப் புறம்பாகக் கரையோர மீன்பிடிப்பில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடல் தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டு படகு மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்


ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் 125 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 50,000-க்கும் அதிகமான நாட்டுப் படகு மற்றும் சிறு தொழில் மீனவர்கள் சிறுவலை மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கடற்கரையிலிருந்து 3 கடல் மைல் தொலைவுக்குள்ளாகவே மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் கடல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டோ, விசைப்படகுகள் மூலமோ மீன் பிடிப்பில் ஈடுபடக் கூடாது என மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் உள்ளது.
ஆனால், கடந்த சில வருடங்களாக இந்தச் சட்டத்தை மீறி விசைப்படகு மீனவர்கள் கரையோர மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதைத் தடுக்க வேண்டிய மீன் துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.

நாட்டு படகு மீனவர்கள் போராட்டம்

இந்த நிலையில், மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படும் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கடந்த 4 ஆண்டுகளாகக் கூட்டப்படாமல் உள்ள மீனவர் குறை தீர்ப்புக் கூட்டத்தை  நடத்த வலியுறுத்தியும் மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சி.ஐ.டி.யு) மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சிறு தொழில் மீனவர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

கேணிக்கரை பகுதியிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி தலைமையில் ஊர்வலமாக வந்த சிறு தொழில் மீனவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து மீனவர்களின் கோரிக்கை குறித்து குறைதீர் கூட்டத்தில் இருந்த மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி, சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகிகள் சிவாஜி, கருணாமூர்த்தி மற்றும் மீனவர் கிராமப் பிரதிநிதிகள் விளக்கினர். 

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உறுதியளித்த மாவட்ட ஆட்சியர் மீனவர் குறைதீர் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். இதைத் தொடர்ந்து மீனவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.