வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (17/12/2018)

கடைசி தொடர்பு:17:22 (17/12/2018)

`சந்தோஷ்ஸ்ரீயை காவலர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்!’ - எஸ்.பி அலுவலகத்தில் கவுசல்யா புகார்

உடுமலையில் உள்ள சங்கர் சமூகநீதி அறக்கட்டளையில் தங்கியிருந்த பெண்ணை வலுக்கட்டாயமாக தங்களுடன் அழைத்துச் சென்ற காவலர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறக்கட்டளையின் நிறுவனர் கவுசல்யா திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்திருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த பெண் சந்தோஷ்ஸ்ரீ. இவர் ஏற்கெனவே திருமணம் முடிந்து தன் கணவருடன் சென்னையில் வசித்து வந்துள்ளார். பின்னர் தம்பதி இருவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டதில், கணவரைவிட்டு விலகிய சந்தோஷ்ஸ்ரீ, அவரிடமிருந்து சட்டப்படி விவாகரத்து பெறுவதற்காக உடுமலையில் கவுசல்யா நடத்திவரும் சங்கர் சமூகநீதி அறக்கட்டளையை அணுகியிருக்கிறார். அந்த அடிப்படையில் சந்தோஷ்ஸ்ரீக்கான சட்ட ஆலோசனைகளை வழங்கிய அறக்கட்டளையினர், அவரை குமரலிங்கத்தில் அறக்கட்டளை செயல்படும் கவுசல்யாவின் இல்லத்திலேயே தங்கவும் வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி இரவு குமரலிங்கம் பகுதிக்கு வந்த காவல்துறையைச் சேர்ந்த 2 பேர், சந்தோஷ்ஸ்ரீயை வலுக்கட்டாயமாக தங்களது காரில் ஏற்றி அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது. 

கவுசல்யா

இந்தச் சம்பவம் குறித்து இன்று திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க வந்திருந்தார் சங்கர் சமூக நீதி அறக்கட்டளையின் நிறுவனரான கவுசல்யா. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``சந்தோஷ்ஸ்ரீயை எங்களுக்கு யாரென்றே தெரியாது. அவரது மண வாழ்வில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வுகாண உதவுமாறு அவர்தான் எங்களது அறக்கட்டளையை அணுகினார். நாங்களும் அவருக்கு வேண்டிய சட்ட உதவிகளைச் செய்துகொடுத்து, அவரை எங்களது அறக்கட்டளையிலேயே தங்க வைத்திருந்தோம். குறிப்பாக அவருக்கு விவாகரத்து வேண்டி நாங்கள் நீதிமன்றத்தை அணுகியிருக்கும் தகவலையும் திண்டிவனம் மற்றும் சென்னை தாம்பரம் காவல்நிலையங்களில் முறைப்படி தெரிவித்துவிட்டோம்.

இந்த நிலையில்தான் கடந்த வியாழக்கிழமை இரவு சந்தோஷ்ஸ்ரீயின் தோழியான மகேஸ்வரி என்பவர் குமரலிங்கத்துக்கு வந்திருந்தார். அவரை வீட்டுக்கு அழைத்து வருவதற்காக சங்கரின் தம்பி யுவராஜூம், அவரின் அண்ணன் முருகனும் பேருந்துநிலையத்துக்குச் சென்றார்கள். ஆனால், அங்கு காத்திருந்த 2 காவலர்கள் என்ன ஏதென்று எதுவும் சொல்லாமல் யுவராஜையும், முருகனையும் கண்மூடித்தனமாக தாக்கினார்கள். மேலும், அவர்களிடம் எங்களது வீட்டைக் காட்டச்சொல்லி நேராக வந்தவர்கள், வீட்டில் இருந்த சந்தோஷ்ஸ்ரீயை மிரட்டி வலுக்கட்டாயமாக அவர்களுடன் காரில் ஏற்றி கூட்டியும் சென்றுவிட்டார்கள். ஒரு பெண்ணை அழைத்துச் செல்ல காவல்துறையினர் என கூறிக்கொண்டு வந்தவர்கள், ஏன் ஒரு பெண் காவலரை உடன் அழைத்துவரவில்லை. இரவோடு இரவாக அத்துமீறி எங்களின் வீட்டுக்குள் நுழைந்து, சந்தோஷ்ஸ்ரீயை இழுத்துச் சென்ற அந்த 2 காவலர்கள்மீதும் காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என்றார்.