`பழுப்பு நிலக்கரி திட்டத்துக்காக நிலத்தைக் கொடுத்தோம்; நடுத்தெருவில் நிற்கிறோம்!’ - ஆதங்கத்தில் மக்கள் | People urges government to hike compensation given to land owners for Jayankondam lignite project

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (17/12/2018)

கடைசி தொடர்பு:19:00 (17/12/2018)

`பழுப்பு நிலக்கரி திட்டத்துக்காக நிலத்தைக் கொடுத்தோம்; நடுத்தெருவில் நிற்கிறோம்!’ - ஆதங்கத்தில் மக்கள்

`ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்காக நிலங்களைக் கொடுத்துவிட்டு பணமும் கிடைக்காமல் நிலமும் கிடைக்காமல் நிர்க்கதியாக நடுரோட்டில் நிற்கிறோம்.எங்களுக்கு வாழ வழி சொல்லுங்கள்' என்று பாதிக்கப்பட்ட 13 கிராம மக்கள் அரியலூர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுத்தனர்.

                                                         ஆட்சியரிடம் மனு

 அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் தாலுகாவில் உள்ள ஜெயங்கொண்டம், மேலூர், செங்குந்தபுரம். தேவனூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. அப்போது அரசு வழங்கிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் அதற்காக அமைக்கப்பட்ட 2 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்ட்டு அதன் விசாரணையில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.13 முதல் 20 லட்சம் வழங்கலாம் என உத்தரவிட்டது.

                                                         இழப்பீட்டுத் தொகையை உயர்த்தக் கோரும் மக்கள்

இதையடுத்து தமிழக அரசு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குத் தற்போதைய வழிகாட்டு மதிப்பைவிட 2 மடங்கு உயத்தி வழங்கக் கருத்துக்கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதன்படி பார்த்தால் ஒரே திட்டத்துக்காக நிலங்கள் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கிராமத்துக்குக் கிராமம் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளதால் பாதிக்கப்படும் 13 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் விஜயலெட்சுமியிடம் மனு அளித்தனர்.

                                                         இழப்பீட்டுத் தொகையை உயர்த்தக் கோரும் மக்கள்

பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் பேசுகையில், “2001 மற்றும் 2004-ல் நிலங்கள் கையகப்படுத்தப்படும்போது அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையைப்போல 25 மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். இதுகுறித்து அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் விஜயலெட்சுமி தெரிவித்தார்’’ என்றனர்.