வெளியிடப்பட்ட நேரம்: 17:16 (17/12/2018)

கடைசி தொடர்பு:17:27 (17/12/2018)

`சோனியாவின் கருத்துதான் யெச்சூரியின் கருத்தும்!’ - `ராகுல் பிரதமர்’ முன்மொழிவால் சர்ச்சை

`பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிந்த முதல் தலைவர் ஸ்டாலின்' என அரசியல் வட்டாரத்தில் விவாதம் கிளம்பியுள்ள நிலையில், அவரது பேச்சு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

`சோனியாவின் கருத்துதான் யெச்சூரியின் கருத்தும்!’ - `ராகுல் பிரதமர்’ முன்மொழிவால் சர்ச்சை

ருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் பேசிய பேச்சு கூட்டணிக்குள் புது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. `தேர்தலுக்குப் பிறகுதான் பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம்' என உறுதியாகக் கூறிவிட்டனர் சி.பி.எம் கட்சி நிர்வாகிகள். 

ஸ்டாலின் பேச்சு

சென்னை ராயப்பேட்டையில் கருணாநிதி சிலைத்திறப்பு விழா சிறப்புப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், ``கருணாநிதியின் மகனாக நான் சொல்ல வருவது என்னவென்றால், 1980-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக வர வேண்டும் எனக் குரல் கொடுத்தபோது, `நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக’ என்றார் கருணாநிதி. 2004-ம் ஆண்டு சென்னை தீவுத்திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் சோனியாவை வரவேற்று பேசும்போது, `இந்திராவின் மருமகளே வருக இந்தியாவின் திருமகளே வெல்க’ என முழங்கினார். இன்று 2018-ம் ஆண்டில் அவரது திருவுருவச்சிலை திறப்புவிழாவில் அவருடைய மகனாக, தமிழகத்திலிருந்து ராகுல்காந்தியின் பெயரை நான் முன்மொழிகிறேன். `ராகுல் காந்தியே வருக நாட்டுக்கு நல்லாட்சியை தருக.’ நாசிச, பாசிஸ மோடி அரசை வீழ்த்தும் அந்த வல்லமை ராகுல்காந்திக்கு உண்டு. ராகுல்காந்தியின் கரத்தை வலுப்படுத்துவோம். அனைவரும் ஒன்று சேர்ந்து வலுப்படுத்துவோம்’’ என்றார். 

ராகுல்காந்தி

`பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிந்த முதல் தலைவர் ஸ்டாலின்' என அரசியல் வட்டாரத்தில் விவாதம் கிளம்பியுள்ள நிலையில், இதுகுறித்து நம்மிடம் பேசிய சி.பி.எம் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் மாநிலச் செயலாளருமான ஜி.ராமகிருஷ்ணன், ``ஏற்கெனவே காங்கிரஸ் தலைமையே, தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்வோம் என அறிவித்துவிட்டது. அதே கருத்தைத்தான் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சென்னை வந்தபோதும் கூறினார். பிரதமர் பதவி என்பது தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்ய வேண்டிய பிரச்னை" என்றார். 

முத்தரசன்

சி.பி.எம்-மின் இந்தக் கருத்தில் முரண்பட்டு நம்மிடம் பேசிய சி.பி.ஐ கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், ``அரசியலில் எதார்த்த நிலையை அறிந்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இன்றுள்ள எதார்த்த நிலையும் அதுதான். இது நல்ல விஷயம்தான். இதை நாங்கள் வரவேற்கிறோம். பொதுவாக, தேர்தலுக்குப் பிறகு பிரதமர் யார் என்பதைப் பேசி வந்தனர். தி.மு.க தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் முன்மொழிந்திருக்கிறார். அவர் நல்ல விஷயத்தைத்தான் சொல்லியிருக்கிறார்" என்றார் உறுதியாக. 

ஜி.ராமகிருஷ்ணன்

இதே கருத்தை வலியுறுத்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும், `2019 பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை முன்மொழிகிறேன் எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்திருப்பது வரலாற்றுச் சிறப்புக்குரிய ஒன்றாகும். இதை வழிமொழிந்து, வாழ்த்தி வரவேற்கிறோம். ராகுல்காந்தியைப்  பிரதமராக்குவதற்குச் செயலாற்றுவோம் என உறுதியேற்கிறோம். கருணாநிதி சிலை திறப்பு விழாவில் இந்த அறிவிப்பை வெளியிட்டது பொருத்தமானதாகும். இந்தியாவெங்கும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை அணிதிரட்டி வரும் ராகுல்காந்தியை, அவருக்கு உற்றத் துணையாக தமிழகத்தில் மதச்சார்பற்ற கட்சிகளின் அணியைத் தலைமையேற்று வழிநடத்தும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினையும் உளமாரப் பாராட்டுகிறோம்' என நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருக்கிறார்.