`வெல்லத்தில் கலப்படம்! - வேதனையில் கரும்பு விவசாயிகள் | sugarcane farmers in distress over contaminated Jaggery production

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (17/12/2018)

கடைசி தொடர்பு:19:40 (17/12/2018)

`வெல்லத்தில் கலப்படம்! - வேதனையில் கரும்பு விவசாயிகள்

கலப்படம்

சமரசம் செய்யும் போலீஸார்

ராமு``வெல்லத்தில் கலப்படம் அதிகரித்துள்ளதால் கரும்பு விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. வெல்லத்தில் கலப்படத்தை நிறுத்த வேண்டும். இல்லையேல் கரும்பு கொண்டு தாக்குவோம்'' என்ற கரும்பு விவசாயிகளும், ``கரும்புக்கு கமிஷன் கொடுக்க முடியாது. வெல்லம் உற்பத்தியை தடுத்தால் குண்டுவெல்லம் கொண்டு வீசுவோம்'' எனப் பதிலுக்கு ஆலை உரிமையாளர்களும் குவிந்ததால் கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

சேலம் செவ்வாய்ப்பேட்டையில் இன்று  கரும்பு மற்றும் வெல்லம் உற்பத்தியாளர்கள் மகாசபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கும், வெல்லம் உற்பத்தியாளர்களுக்கும் வாக்குவாதம் முற்றி கலவரம் ஏற்படும் நிலை உருவானது. உடனே காவல்துறையினர் வந்து சமரசம் செய்தார்கள். இதுபற்றி கரும்பு விவசாயி ராமு கூறுகையில்,``நாட்டில் விவசாயிகள் படும் துயரம் கொஞ்சம் நஞ்சமில்லை. இந்த நிலையில், கரும்பிலிருந்து உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தில் அதிகளவு கலப்படம் செய்வதால் கரும்பின் விலை கடுமையாக சரிந்துள்ளது. கடந்த வருடம் ஒரு டன் கரும்பு ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை போனது. இந்த வருடம் வெறும் ரூ.1,500 கூட போகவில்லை.சதீஷ்

இதற்குக் காரணம் வெல்லத்தில் கிறிஸ்டல் சுகர் மற்றும், ஒயிட் சர்க்கரை கலப்பதாலும், சூப்பர் பாஸ்பேட் போன்ற வேதிப் பொருள்கள் சேர்ப்பதாலேயே கரும்பின் விலை குறைந்துள்ளது. சேலம் உணவுப் பாதுகாப்பு அலுவலர் ரூ.45 லட்சம் மதிப்புடைய கலப்பட வெல்லத்தைக் கைப்பற்றி  இருக்கிறார். வெல்லத்தில் கலப்படம் செய்வதால் கரும்பு விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் எங்களோடு சேர்ந்து மக்களும் வெல்லத்தில் கலப்படம் செய்வதைத் தடுக்க வேண்டும்’’ என்றார்.

வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலை உரிமையாளர் சதீஷ், ``கடந்த ஆண்டைவிட இந்த வருடம் 4 மடங்கு கரும்பு விளைச்சல் அதிகரித்துள்ளதே கரும்பு விலை வீழ்ச்சிக்குக் காரணம். இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நாங்கள் வெல்லத்தில் கலப்படம் செய்வதில்லை. விவசாயிகள் எங்களைக் கலப்படம் செய்யத் தூண்டுகிறார்கள். வெல்லத்தில் எதை வேண்டுமென்றாலும் கலந்துகொள்ளுங்கள் எங்களுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.3,000 கொடுங்கள் என்று தொடர்ந்து பிரச்னை செய்து வருகிறார்கள்'' என்றார். எது எப்படியோ பொங்கலுக்காவது கலப்படம் இல்லாத உணவைத் தாருங்கள்.