வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (17/12/2018)

கடைசி தொடர்பு:20:00 (17/12/2018)

விஸ்வரூபம் எடுக்கும் உயர்மின் கோபுர விவகாரம் - தொடர் போராட்டத்தில் விவசாயிகள்

விவசாய விளைநிலங்களின் வழியாக உயர்மின் அழுத்தக் கோபுரங்கள் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தைக் கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றின் சார்பாக விவசாய விளைநிலங்களின் வழியே உயர் மின் அழுத்தக் கோபுரங்கள் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்ததுடன், திட்டத்தைக் கைவிடக்கோரி தொடர் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார்கள். கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய இத்திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பின்பற்றப்படுவதைப் போல நிலத்துக்கு அடியிலேயே கேபிள் மூலமாக மின்சாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால், விவசாயிகளின் இந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், தொடர்ந்து மின் கோபுரங்கள் அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது அரசு நிர்வாகம். எனவே, தங்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத அரசை கண்டித்தும், விளைநிலங்களில் மின் கோபுரங்கள் அமையவிருப்பதற்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் இன்று திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உயர் மின் அழுத்த கோபுரங்கள்

திருப்பூர் மாவட்டம் கள்ளிப்பாளையம் பகுதியில் இன்று நடைபெற்று வரும் காத்திருப்புப் போராட்டத்துக்கு முதலில் காவல்துறையினர் அனுமதி வழங்காத நிலையில், நீதிமன்றப் படிகளேறி போராட்டத்துக்கான அனுமதியைப் பெற்றிருக்கிறார்கள் விவசாயிகள். இன்னமும் அரசு, விவசாயிகளுக்கு சாதகமான முடிவை எடுக்கவில்லை என்றால் காத்திருப்புப் போராட்டத்தையே தொடர் போராட்டமாக கட்டமைக்கும் முடிவிலும் தாங்கள் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள் விவசாயிகள்.