`அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்கும் காவலாளிகள்!’ - கொந்தளிக்கும் அவசர சிகிச்சை நுட்புனர்கள் | Emergency care technicians files complaint with theni collector over employment

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (17/12/2018)

கடைசி தொடர்பு:21:00 (17/12/2018)

`அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்கும் காவலாளிகள்!’ - கொந்தளிக்கும் அவசர சிகிச்சை நுட்புனர்கள்

அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை தொழில்நுட்பநர்களைப் பணியில் அமர்த்தாமல், காவலாளிகளைக் கொண்டு மருத்துவம் பார்த்துவருவதாக அவசர சிகிச்சை தொழில்நுட்பநர்கள் (Emergency care technicians) குற்றம்சாட்டுகின்றனர்.

புகார் அளித்த அவசர சிகிச்சை நுட்புனர்கள்

தேனி மாவட்டம் கானாவிலக்கு பகுதியில் அமைந்துள்ளது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. தமிழகத்தில் 2005-ம் ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அவசர சிகிச்சை தொழில்நுட்பநர்களுக்கான டிப்ளமோ படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இதை மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். இந்நிலையில், தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி அவசர சிகிச்சை தொழில்நுட்பநர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள், இன்று மாவட்டக் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர்.

தேனி மாவட்ட ஆட்சித் தலைவர்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய லோகமணி, “தமிழக சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் 22 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் தமிழகம் முழுவதும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவை அனைத்திலும் அவசர சிகிச்சை தொழில்நுட்பநர்களுக்கான டிப்ளமோ படித்தவர்கள், 2017-ம் ஆண்டு கணக்கின்படி சுமார் 2,500 பேர் உள்ளனர். மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சை கண்காணிப்பு பிரிவுகளில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து 1 வருடப் படிப்பு மற்றும் 3 மாதம் பயிற்சியுடன் கூடியதே இந்தப் படிப்பு. நாங்கள் அனைவரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோம். ஆனால், எங்களை பணிநியமனம் செய்யாமல், மருத்துவமனை  உதவியாளர்கள், காவலாளிகள் உள்ளிட்டோரை  அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் பயன்படுத்துகின்றனர். இது மிகவும் ஆபத்தானது. உடனே, மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு அரசு மருத்துவமனையில் பணியமர்த்த வேண்டும்” என்றார். புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதியளித்தார்.