சிலைக்கடத்தல் வழக்கு - இந்து அறநிலையத்துறை கூடுதல் கமிஷனருக்கு நிபந்தனை ஜாமீன்! | Kumbakonam court grands condition bail to HRNC commissioner Tirumagal

வெளியிடப்பட்ட நேரம்: 19:38 (17/12/2018)

கடைசி தொடர்பு:19:46 (17/12/2018)

சிலைக்கடத்தல் வழக்கு - இந்து அறநிலையத்துறை கூடுதல் கமிஷனருக்கு நிபந்தனை ஜாமீன்!

சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் மூன்று சிலைகள் மாயமான வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் கமிஷனருக்கு கும்பகோணம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. 

திருமகள்

சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் 2004-ம் ஆண்டு கோயில் கும்பாபிஷேகத்துக்காக திருப்பணி நடைபெற்றபோது புன்னைவனநாதர் சந்நிதியில் சிவனுக்கு பூஜைசெய்யும் மரகதத்தால் ஆன மயில் சிலையும், ராகு, கேது ஆகிய சிலைகள் இருந்தன. இந்தச் சிலைகள் திருப்பணியின்போது அகற்றப்பட்டு, புதிய சிலைகள் அங்கு வைக்கப்பட்டது. இதற்கு கோயில் அர்ச்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அகற்றப்பட்ட மூன்று சிலைகளும் ஆகமவிதிப்படி பூஜைகள் நடத்தி பூமிக்கு அடியில் புதைத்திருக்க வேண்டும். ஆனால், மூன்று சிலைகளும் அப்படிச் செய்யப்படாமல் இருந்ததால், அந்தச் சிலைகள் எப்படியோ கோயிலில் இருந்து மாயமானது. இந்தச் சிலைகளை கோயில் அதிகாரிகள் திருடி விற்றதாக ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ் நரசிம்மன் என்பவர் தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸில் புகார் செய்தார். இது தொடர்பாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, கோயிலில் அப்போது செயல் அலுவலராக பணியாற்றி வந்த, தற்போது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனராக உள்ள சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த திருமகள் என்பவரை  நேற்று  கைது செய்தனர்.

ஜாமீன்

கும்பகோணத்துக்கு நேற்று  இரவு கொண்டுவரப்பட்ட திருமகளுக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வீட்டில் திருமகளை போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிபதி 17-ம் தேதி காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள், அதுவரை போலீஸார் பாதுகாப்பில் திருமகள் இருக்க வேண்டும் எனக் கூறினார். இதைத்தொடர்ந்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட திருமகளை இன்று காலை போலீஸார் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர்.

திருமகள்

இந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதியிடம் திருமகள் தரப்பு வழக்கறிஞரும், அரசு வழக்கறிஞரும் தங்களுடைய வாதங்களை முன்வைத்தனர். இதையடுத்து, வழக்கை சிறிது நேரம் நீதிபதி ஒத்திவைத்தார். பின்னர் மதியத்துக்கு மேல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது திருமகளுக்காக கும்பகோணத்தைச் சேர்ந்த அறநிலையத்துறை ஆய்வாளர் சுதாவும், துறையூரைச் சேர்ந்த விவசாயி ரமேஷும் ஜாமீன் தருவதாக நீதிபதியிடம் கூறினர். இருநபர் ஜாமீனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மறுஉத்தரவு வரும் வரை திருச்சியில் தங்கி தினமும் காலை 10 மணிக்கு அங்குள்ள சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என திருமகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி அய்யப்பன்பிள்ளை உத்தரவிட்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க