`கரூர் - கோவை ஆறுவழிச் சாலையால் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் பாழாகும்!’ - கொந்தளிக்கும் விவசாயிகள் | Farmers staged protest in Coimbatore against proposed 6 lane road project between Coimbatore - Karur

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (17/12/2018)

கடைசி தொடர்பு:22:00 (17/12/2018)

`கரூர் - கோவை ஆறுவழிச் சாலையால் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் பாழாகும்!’ - கொந்தளிக்கும் விவசாயிகள்

கோவை - கரூர் இடையே ஆறு வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்து மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் முதல் கோவை வரை ஆறு வழி பசுமைச்சாலை அமைப்பதற்காக சுமார் 2,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள சாலையை அகலப்படுத்தாமல் புதிதாக ஆறு வழிச்சாலை அமைப்பதால் சுமார் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு இந்தத் திட்டத்தை விவசாய நிலங்கள் வழியே செயல்படுத்தக் கூடாது எனவும் தற்போது இருக்கக்கூடிய சாலையை அகலப்படுத்தும் பட்சத்தில் அதற்கான நிலங்களைத் தரத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், தற்போது செயல்படுத்தப்பட உள்ள ஆறு வழி பசுமைச் சாலை சுமார் 50 கிலோ மீட்டர் வரை அதிக தூரம் இருப்பதாகவும் எனவே, பலவகைகளிலும் இந்தத் திட்டம் தேவையற்ற திட்டம் எனச் சுட்டிக்காட்டிய விவசாயிகள், விவசாயிகளின் நிலத்தைக் கையகப்படுத்த ஒருபோதும் விட மாட்டோம் எனவும் அதற்காகப் பலகட்டப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தில் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாற்றும் அவர்களின் குடும்பங்களும் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிசாமி கூறுகையில், ``கரூர் முதல் கோவை வரை ஏற்கெனவே உள்ள சாலையை (NH- 81) விரிவுபடுத்தினால், விளை நிலங்கள் பாதிக்கப்படாமல் மேற்கொண்டு நிலம் கையகப்படுத்தவும் தேவையில்லை. திட்டச் செலவும் குறையும். இதற்கெல்லாம் மேலாக 53 கி.மீ பயண தூரம் குறையும். கிழக்கு புறவழிச் சாலைத் திட்டத்தின் தெற்குப் பகுதியில் உள்ள கரடிவாலி, காரச்சேரி, தொப்பம்பாளையம், அரிசிபாளையம், பாலத்துறை வரை உள்ள சாலைக்குப் பதிலாக பல்லடம் - கொச்சி சாலை (SH163) இதற்கு இணையாக வெறும் 2.5 கி.மீ தூரத்தில் இருப்பதால் அதை விரிவுபடுத்தினால், இதனால் ஏற்படும் ஒட்டுமொத்த இழப்பீடுகளையும் தவிர்க்கலாம்.

மேலும் L &T பைபாஸ் (NH544) இந்த வழித்தடத்தில் இணைவதால் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கு இந்தத் சாலையைப் பயன் படுத்தலாம். கிழக்கு புறவழி சாலைத் திட்டத்தின் வடக்குப் பகுதியில் கருமத்தம்பட்டி- கிட்டாம் பாளையம் வழியாகச் சக்தி சாலை வரையும், சக்தி சாலையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலை வரை உள்ள 12 வழித்தடங்களில் கிறனத்தம் வழியாக பெரிய நாயக்கன்பாளையம் செல்லும் வழித்தடத்தை விரிவுபடுத்தினால் ஒட்டு மொத்த இழப்புகளைத் தவிர்க்கலாம்’’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பில் ஈடுபட்ட விவசாயிகள் திட்டத்துக்கு எதிரான மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.