ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகாரில் குற்றம்சாட்டபட்டவர்கள் ஏன் அடையாளம் காணப்படவில்லை? - நீதிமன்றம் கேள்வி | Madras HC raises question over RK nagar case distribution case FIR

வெளியிடப்பட்ட நேரம்: 21:01 (17/12/2018)

கடைசி தொடர்பு:21:01 (17/12/2018)

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகாரில் குற்றம்சாட்டபட்டவர்கள் ஏன் அடையாளம் காணப்படவில்லை? - நீதிமன்றம் கேள்வி

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது பணப்பட்டுவாடா புகாரில் இதுவரை ஏன் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

ஐகோர்ட்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அவரது தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அந்த இடைத்தேர்தலின்போது, 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அபிராமபுரம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை கிழக்கு பகுதியின் அப்போதைய இணை ஆணையர் மனோகரனுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை கிழக்குப் பகுதியின் அப்போதைய இணை ஆணையர் மனோகரன், தற்போதைய இணை ஆணையர் அன்பு இருவரும் ஆஜராகி இருந்தனர். தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக வருமான வரித் துறை அளித்த அறிக்கையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ரம்யா மற்றும் சின்னத்தம்பி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தும், அந்த பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை எனவும், தேர்தல் ஆணையத்தின் புகாரில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், உண்மை வெளிச்சத்துக்கு வர இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் எனக் கூறி, கூடுதல் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

ஆர்கே நகர்

காவல்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர், பணப்பட்டுவாடா வழக்கை ரத்து செய்யக்கோரி நரசிம்மன் தாக்கல் செய்த மனுவுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தபோதும், அந்த வழக்கை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதாகவும்,  விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகவும், 882 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தங்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

இணை ஆணையர்கள் தாக்கல் செய்த அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், வழக்கை ரத்து செய்யக்கோரி நரசிம்மன் தாக்கல் செய்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போதுமான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என காவல்துறையைக் கடிந்து கொண்டனர். வருமானவரித் துறை அறிக்கையில் 3 பேரின் பெயரை குறிப்பிட்டிருந்தபோதும், 882 சாட்சிகள் விசாரிக்கப்பட்டபோதும்,  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஏன்  அடையாளம் காண முடியவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, பணப்பட்டுவாடா வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ் தாக்கல் செய்த கூடுதல் மனுவுக்கு ஜனவரி 10-ம் தேதிக்குள்  பதிலளிக்கும்படி, தமிழக தலைமைச் செயலாளர், இந்திய தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, டி.ஜி.பி மற்றும் சி.பி.ஐ-க்கு   நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர்.