வெளியிடப்பட்ட நேரம்: 21:35 (17/12/2018)

கடைசி தொடர்பு:21:35 (17/12/2018)

`மாவோயிஸ்ட் பத்மாவுக்கு உரிய சிகிச்சையளிக்க வேண்டும்’ - தமிழ்நாடு குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம்

பெண் மாவோயிஸ்ட் பத்மாவுக்கு முறையான சிகிச்சைக் கொடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

புழல் சிறையிலுள்ள பெண் மாவோயிஸ்ட் பத்மாவுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது. இதில் எழுத்தாளர்கள் அ.மார்க்ஸ், கொற்றவை மற்றும் பத்மாவின் கணவர் விவேக் ஆகியோர் கலந்துகொண்டனர். மாவோயிஸ்ட் பத்மாவுக்குத் தீவிர இதயத்துடிப்பு (svt) மற்றும் mitrac value prolapse நோய்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளன. 

மாவோயிஸ்ட் பத்மா - மருத்துவ சிகிச்சைக்காக பத்திரிக்கையாளர் சந்திப்பு

2010-ம் ஆண்டு ஊத்தங்கரையில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்த பத்மா, அதன் பின்பு தலைமறைவானார். அவர்மீது பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது. பத்மாவின் உடல்நிலை மிகவும் மோசமானதால் கடந்த 7-ம் தேதி, தன் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால், சிறப்பு நீதிமன்றம் அவரின் கோரிக்கையை நிராகரித்து, புழல் சிறையில் அடைத்தது. சிறையில் அவரின் உடல்நிலை மோசமானதால் கடந்த 10-ம் தேதி இரவு 2 மணியளவில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

பத்மாசிகிச்சை முழுமைபெறாமல், பத்மாவின் உடல்நிலை தேறாத நிலையிலேயே அவர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மீண்டும் அவரின் உடல்நிலை மிகவும் மோசமானதால், புழல் சிறையில் இருந்து ஸ்டான்லிக்கு உடனடியாகக் கொண்டுவரப்பட்டார். மருத்துவமனையிலும் அவருக்கு முழுமையான சிகிச்சைகள் கொடுக்கப்படவில்லை. மருத்துவமனையில் இதய நோயாளிகளின் பிரிவில் சிகிச்சைக் கொடுக்காமல், சிறைக்கைதிகள் அனுமதிக்கப்பட்டிருந்த சாதாரண வார்டிலேயே இவருக்கு சிகிச்சைக் கொடுத்தனர். அவரின் உடல்நிலை முழுவதுமாகத் தேறும் முன்னே கடந்த 15-ம் தேதி மறுபடியும் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

பத்திரிகையாளர் சந்திப்பில் பத்மாவின் கணவர் விவேக் பேசுகையில், ``சிறையில் போதிய வசதி இல்லாத காரணத்தால் அவருக்கு முறையான சிகிச்சை அளிக்க வழிவகை செய்ய வேண்டும். உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதால் சிறையிலிருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது மிகவும் ஆபத்தான ஒன்று. மருத்துவமனையில் வைத்து இருந்தால் பிணை கிடைத்துவிடும் உரிய சிகிச்சை கிடைத்துவிடும் என்பதற்காகக் காழ்ப்பு உணர்ச்சியின் காரணமாக இந்த இழுபறி நடைபெறுகிறது'' என்றார்.

2010-ம் ஆண்டு பத்மா ஜாமீனில் வெளிவந்த பிறகு, தன்மீது பொய் வழக்கு ஜோடிக்க முயன்றதால்தான் அவர் தலைமறைவானார். அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் தானாகவே வந்து சரணடைந்து, பிடியாணையை நீக்கக் கூறினார். சரணடைந்ததையும் அவரின் மோசமான உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவருக்கு உரிய சிகிச்சையைக் கொடுக்க வேண்டும் என்பதற்காவவே தமிழ்நாடு குடியுரிமை பாதுகாப்பு நடுவம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.      

- கு.ஹரிகரன்