ஓட்டுநர் உரிமத்துக்கு லஞ்சம் - மண்சட்டியோடு பிச்சை எடுத்து நூதன போராட்டம் நடத்திய இளைஞர்! | Bribe for driving licence: Man staged bizarre protest in Madurantakam

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (17/12/2018)

கடைசி தொடர்பு:23:00 (17/12/2018)

ஓட்டுநர் உரிமத்துக்கு லஞ்சம் - மண்சட்டியோடு பிச்சை எடுத்து நூதன போராட்டம் நடத்திய இளைஞர்!

ஓட்டுநர் உரிமம் பெற லஞ்சம் கேட்பதாக இளைஞர் ஒருவர் மண்சட்டியோடு பிச்சை எடுத்த சம்பவம் மதுராந்தகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

லஞ்சம் காரணமாக நூதன போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த ஒரத்தி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது அசல் ஓட்டுநர் உரிமம் கடந்த சில மாதங்களுக்கு முன் தொலைந்துவிட்டது. இதைப் பெறுவதற்காகத் தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்குச் சென்று புதிய ஓட்டுநர் உரிம நகலைப் பெற்றுத் தருமாறு தெரிவித்துள்ளார். அதற்கு அதிக செலவு ஆகும் எனத் தெரிவித்து மகேந்திரனிடமிருந்து 7,000 ரூபாயைப் பரமசிவன் என்பவர் பெற்றுக்கொண்டுள்ளார். பின்பு, ஒரு படிவத்தைப் பூர்த்தி செய்து மகேந்திரனிடம் கொடுத்துவிட்டு வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பார்த்துக்கொள்வார் எனக் கூறி அனுப்பிவிட்டார். அந்தப் படிவத்தை வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளரிடம் கொடுத்துள்ளார் மகேந்திரன்.

அப்போது கொடி நாள் நன்கொடை கொடுக்கச் சொல்லி இருக்கிறார் வட்டாரப் போக்குவரத்து அலுவலர். ‘நான் ஏற்கெனவே ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் 7,000 ரூபாய் கொடுத்துவிட்டேன். என்னிடம் பணம் இல்லை’ என மகேந்திரன் கூறியுள்ளார். ‘வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கொடி நாள் பணம் கேட்கிறார்’ எனப் பரமசிவத்திடம் மகேந்திரன் தெரிவித்தார். “ஒரு மண்சட்டி வாங்கி வந்து அதிகாரிகள் பணம் கேட்பதாகக் கூறி பிச்சை எடுத்தால் பரபரப்பாகிவிடும். உடனே உனக்கு உடனடியாகப் புதிய ஓட்டுநர் உரிமம் கிடைத்துவிடும்’ எனப் பரமசிவம் கூறியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து மண்சட்டியோடு வந்த மகேந்திரன் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரில் திடீரென பிச்சை எடுக்கத் தொடங்கினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மதுராந்தகம் காவல்துறையினர் மகேந்திரனிடம் விசாரணை செய்து அனுப்பியிருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க