`கள்ளுக்கான தேவை காலத்தின் கட்டாயம்” - பரப்புரை பயணத்தை துவங்கிய கள் இயக்க விவசாயிகள் | Kal.nallasamy Says about Palm wine needs

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (18/12/2018)

கடைசி தொடர்பு:07:22 (18/12/2018)

`கள்ளுக்கான தேவை காலத்தின் கட்டாயம்” - பரப்புரை பயணத்தை துவங்கிய கள் இயக்க விவசாயிகள்

தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கள்ளுக்கான தேவை குறித்தும், அதற்கு போடப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தியும் பேச இருப்பதாக தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி திருப்பூரில் தெரிவித்திருக்கிறார்.

கள்

 

தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் . ``பனை தென்னை பாதுகாப்பு பரப்புரை" தொடங்கியுள்ளனர். இதுகுறித்து திருப்பூரில் பேசிய அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி. ``சுதந்திரத்துக்கு முன்பு நம் நாட்டில் 50 கோடியாக இருந்த பனை மரங்களின் எண்ணிக்கை தற்போது 4 கோடியாக குறைந்துவிட்டன. பனை மரங்கள் மட்டும் அதிகளவு இருந்திருந்தால் காஜா புயலால் நாம் இவ்வளவு பெரிய அழிவை டெல்டாவில் சந்தித்திருக்க மாட்டோம். நம் அரசியல் அமைப்பு சட்டமே நமக்கு கள் இறக்கவும், பருகவும் உரிமையை வழங்கியிருக்கிறது. கள்ளுக்கான தடையை நீக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. பாலித்தீன் பைகளுக்கு அரசே தடை விதித்துவிட்டதால், இனி அவற்றுக்கு மாற்றாக பனை, தென்னை பொருள்களுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும்.

பனை, தென்னை கருப்பட்டிக்கு மானியம் கொடுத்து நியாய விலைக் கடைகளின் மூலமாக அவற்றை மக்களுக்கு விநியோகிக்க வேண்டும். தற்போது பனை மரங்களையும், தென்னை மரங்களையும் காக்க வேண்டிய கட்டாயத் தேவை உருவாகியுள்ளது. அதை வலியுறுத்தவே நாங்கள் இந்தப் பரப்புரை பயணத்தை துவங்கியுள்ளோம். `பனை தென்னை பாதுகாப்பு பரப்புரை' என்ற பெயரில் 3 நாள்கள் தொடர் பயணத்தை துவங்கியிருக்கும் நாங்கள், வரும் 19-ம் தேதி சென்னையில் இந்தப் பயணத்தை நிறைவு செய்யவுள்ளோம். மேலும், அன்றைய தினம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, தமிழகத்தில் கள் இறக்குவதற்குப் போடப்பட்டிருக்கும் தடையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி பேசப்போகிறோம்” என்று தெரிவித்தார்.