ரத்தின அங்கி உடையில் காட்சியளித்த நம்பெருமாள்.... ஶ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு | vaikuntha ekadasi sorgavasal opened at srirangam

வெளியிடப்பட்ட நேரம்: 08:08 (18/12/2018)

கடைசி தொடர்பு:08:47 (18/12/2018)

ரத்தின அங்கி உடையில் காட்சியளித்த நம்பெருமாள்.... ஶ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம். 108 திவ்ய தேசங்கள் மற்றும் வைணவத் தலங்களில் முதன்மையானது. இங்கு வருடா வருடம் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மிகவும் பிரசித்திபெற்ற விழா ஆகும். பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாள்கள் நடைபெறும் இந்த விழா, கடந்த 7-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. 8-ம் தேதியிலிருந்து நம்பெருமாள் தினமும் காலை மூலஸ்தானத்தில் இருந்து வெவ்வேறு அலங்காரங்களில் புறப்பாடு நடந்தது.  நம்பெருமாள், அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவைச் சாதித்து வந்தார்.

ஶ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு

பகல் பத்து உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, ஆழ்வார்கள், பக்தர்கள் புடை சூழ அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மாலை 5 மணி வரை பக்தர்களுக்கு சேவைச் சாதித்தார். பின்னர் கருடமண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்த உலக வாழ்க்கை ஒரு மாயை. மோகினி அலங்காரத்தில் நம்பெருமாளை வழிபட்டால் இந்த மாயையில் இருந்து விடுபட்டதற்கான பலன் கிடைக்கும் எனும் ஐதீகப்படியாலும், ரங்கநாத பெருமாளை தரிசிப்பதன் மூலம் அந்த இரண்டு திவ்ய தேசங்களை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்கிற பக்தர்களின் நம்பிக்கையின் படியால் நேற்று இரவு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மோகினி அலங்காரத்தில் இருந்த நம்பெருமாளை தரிசித்தனர்.

மேலும், வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி 236 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்தின் அடிப்பாகத்திலிருந்து உச்சி வரை மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டது. இதை சாதனை நிகழ்ச்சியாகக் கூறப்படுகிறது. மேலும், ஶ்ரீரங்கத்தில் உள்ள அனைத்து கோபுரங்கள் மற்றும் மதில்சுவர் எல்லாம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின் வெளிச்சத்தில் பளபளத்தது. இந்நிகழ்ச்சிக்காக திருச்சி மட்டுமல்லாமல், அரியலூர், பெரம்பலூர், கரூர் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது கோயில் வளாகத்தில் குவிந்தனர். முக்கிய பிரமுகர்கள் மற்றும் சிறப்பு அனுமதி அட்டைப் பெற்றவர்கள் மட்டும் கோயிலுக்குள் அதற்காக அமைக்கப்பட்டிருந்த தனி பாதைகள் வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் இரவில் இருந்தே நீண்ட வரிசையில் காத்து நின்றனர். மேலும், இந்நிகழ்ச்சிக்கு வருகை தரும் பக்தர்களை ஒழுங்குபடுத்தி, நெரிசல் இன்றி அவர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாகத் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த அந்தந்த மாவட்ட எஸ்.பி , டி.எஸ்.பி-க்கள் தலைமையில் சுமார் 4,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கோயிலின் முக்கிய இடங்களில் பெரிய கேமராக்கள் வைக்கப்பட்டும், பெரிய எல்.இ.டி டிவி-க்கள் பொருத்தப்பட்டுள்ளது. குற்றத்தைத் தடுக்கவும், குற்றம் நடவாமல் கண்காணிக்கவும் கோயிலைச் சுற்றி முக்கிய இடங்களில் ஒலிபெருக்கிகளுடன் கூடிய கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சொர்க்கவாசல் திறப்பு

நம்பெருமாள் சொர்க்கவாசலில் எழுந்தருளிய பிறகு, அந்த வழியில் சென்று அவரை தரிசிப்பதற்காகவும், மூலவரை முத்தங்கி சேவையில் தரிசனம் செய்வதற்காகவும் கோயில் பிராகாரங்களில் ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்துக் காத்திருந்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை 5.30 மணியளவில், வைகுண்ட ஏகாதசி விழாவின் முதன்மை நிகழ்ச்சியான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் நம்பெருமாள் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளி மாலை மற்றும் திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து அதிகாலை 4.20 மணிக்குக் புறப்பட்டு, சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்த நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள மணல் வெளி திருக்கொட்டகையில் அதிகாலை 5.45 மணிக்குக் காட்சியளித்தார். அதையடுத்து, நம்பெருமாளைக் காணத் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களை நம்பெருமாள் சுற்றி சுற்றி வந்து சேவை சாத்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் காமராஜ், வளர்மதி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வேணு சீனிவாசன் தலைமையில் அறங்காவலர்கள் மற்றும் இணை ஆணையர் ஜெயராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், காலை 8 மணிக்குக் சாதரா மரியாதை அளிக்கப்பட்ட பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளுகிறார். அதையடுத்து நடைபெறும் அலங்காரம் அமுது நிகழ்ச்சிக்குப் பிறகு, காலை 8.45 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.  மேலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அரையர் சேவை நடைபெற உள்ளதாகவும், இரவு 10.30 மணி முதல் 11 மணி வரை உபயகாரர் மரியாதை வழங்கப்படும். நள்ளிரவு 12 மணிக்கு நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் 19-ம் தேதி அதிகாலை 1.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். நம்பெருமாள் கடந்து செல்லும் பரமபதவாசல் இன்று இரவு 10 மணி வரை திறந்து இருக்கும். மூலவரை முத்தங்கியில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தரிசிக்கலாம் என்பதால் பக்தர்கள் வருகை அதிகமாகவே உள்ளது.

ராப்பத்து உற்சவம் முடிந்த பிறகு, வருகிற 24-ம் தேதி திருக்கைத்தல சேவையும், 25-ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 27-ம் தேதி தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. வரும் 28-ம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது. இந்த விழாக்களால் வழக்கத்தை விடப் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. ஶ்ரீரங்கம் களைக்கட்டி உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க